Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்னைக்குள் செடி மிளகு... நேரடி பலன்தரும் நேர்த்தியான நுட்பங்கள்!

இந்தியாவை பிரிட்டிஷார் ஆட்சி செய்த காலத்தில் மிளகு என்பது ஓர் அபூர்வப்பொருள். மிளகின் காரத்தன்மையையும், மருத்துவ மேன்மையையும் அறிந்துகொண்ட ஆங்கிலேயர் மிளகை மொத்தமாக கொள்முதல் செய்து தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்தியர்களான நமக்கு மிளகாயைக் காட்டி இதை காரத்திற்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என நம் தலையில் கட்டினார்கள் என ஒரு கதை உண்டு. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். மலையில் விளைந்த மிளகு இப்போது தரையிலேயே விளைகிறது. இதற்கெல்லாம் அச்சாரம் இட்டது புதுக்கோட்டை மாவட்டம்தான். ஆம், புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க சமவெளியில் பயிரிட்டுள்ள தென்னை மரங்களில் மிளகுக்கொடிகள் ஏறி விளைச்சல் தந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது மரத்தில் கொடியாக ஏறாமல் கீழேயே காய்க்கும் செடி மிளகு ரகமும் புதுக்கோட்டையில் கோலோச்சுகிறது. அந்த வகையில் தமது ஆறரை ஏக்கர் தென்னையில் செடி மிளகை அம்சமாக பயிரிட்டு வருகிறார் புதுக்கோட்டை ஆலங்குடியை அடுத்த ஆலங்காட்டைச் சேர்ந்த மெய்யர். மழையும், வெயிலும் மாறி மாறி வீசிய ஒரு மதியப்பொழுதில் மெய்யரைச் சந்தித்தோம். `` பாரம்பரிய விவசாயக் குடும்பம்ங்கிறதால படிச்சிக்கிட்டு இருந்தாலும் விவசாயத்தையும் சேர்த்தே பார்த்துக்கிட்டு வந்தேன். படிச்சி முடிச்சிட்டு ஆலங்குடி கூட்டுறவு விற்பனை சங்கத்துல பொது மேலாளரா வேலை பார்க்கிறேன். ஆனாலும் விவசாயத்தை இன்னும் ஆர்வமாக பார்த்துக்கிட்டு வரேன். ஆரம்பத்துல நிலக்கடலை, கரும்பு, நெல்லுன்னு மாத்தி மாத்தி பயிர் பண்ணுவோம். ஒரு கட்டத்துல வயல் வேலைக்கு ஆள் கிடைக்குறது அரிதாகி போயிடுச்சி. சீசன் நேரங்கள்ல ஆளே கிடைக்க மாட்டாங்க. அதனால் இந்தப் பயிர்களை கைவிட்டுட்டு தென்னை விவசாயத்துக்கு வந்துட்டேன். கரெக்டா 2019ல தென்னை விவசாயத்துல இறங்குனேன்.

நிலத்தை நல்லா 6 முறை உழவு ஓட்டி மரத்துக்கு மரம் 22க்கு 22 அடி இடைவெளி விட்டு, கயிறு பிடிச்சி நடவுக்குழி அமைச்சோம். கடைசி உழவுல தொழுவுரம் போட்டோம். நடவுக்குழியில மணல், குப்பை எரு, குருணை மருந்து, உப்பு கலந்து போட்டு நெட்டை, குட்டை ரக கன்றுகளை நட்டோம். நட்டவுடனே உயிர்ப்பாசனம் விட்டோம். அதுக்கப்புறம் வாரம் ஒரு பாசனம். 3 மாசத்துக்கு ஒருமுறை டிராக்டர் வச்சி உழவு ஓட்டி களைச்செடிகளை அகற்றிடுவோம். அதே மாதிரி வருசத்துக்கு 2 தடவை தொழுவுரம், தென்னை நுண்ணூட்டம், யூரியா, பொட்டாஷ், வேப்பம்புண்ணாக்கைக் கலந்து செடிக்கு 6 கூடை போடுவோம். அதாவது மரத்தைச் சுற்றி வட்டமா 1 அடி ஆழத்துக்கு குழியெடுத்து இந்தக் கலவையைப் போட்டு மூடிடுவோம். அதுக்கப்புறம் அதுக்கு மேல வட்டமா பாத்தி எடுத்து அதுக்குள்ள தண்ணி பாசனம் செய்வோம். இப்போது வட்டக்குழிக்குள்ள தண்ணி தேங்கி நிக்கும். அதுக்கும் கீழ உரக்கலவை இருக்கும். இது மரங்களுக்கு நல்ல ஊட்டம் கொடுக்கும். 3 மாசத்துக்கு ஒருமுறை மானாகுரோட்டாபாஸ் மருந்தை 20 லிட்டருக்கு 50 மில்லிங்குற கணக்குல கலந்து தெளிப்போம். இது கூண்வண்டுகளைக் கட்டுப்படுத்தும்.

தென்னைக்கு இயற்கை முறையிலும் கரைசல் தயார் பண்ணி தெளிக்கிறோம். அதாவது வேப்பம்புண்ணாக்கு, கடலைப்புண்ணாக்கு, எள்ளு புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு, நாட்டு மாட்டு சாணம், கோமியம், நாட்டுச்சர்க்கரை... இந்தப் பொருட்களைக் கலந்து 20 நாள் ஊற வைப்போம். அப்புறமாக எடுத்து மரத்துக்கு தெளிப்போம். இந்தக் கலவையை 6 மாசத்துக்கு ஒரு முறை தெளிப்போம். இதனால் பூச்சிகள் கட்டுப்படுவதோட, மரத்துக்கு நல்ல ஊட்டமும் கிடைக்கும். இது மாதிரி செஞ்சிக்கிட்டு வர்றதால 5 வருசத்துல காய் காய்க்க ஆரம்பிச்சிது. இந்த ஆறரை ஏக்கர்ல 480 தென்னை மரம் இருக்கு. இதுல இருந்து 2 மாசத்துக்கு ஒருமுறைன்னு வருசத்துக்கு 6 முறை காய் வெட்டுறோம். ஒரு வெட்டுக்கு 5 ஆயிரத்துல இருந்து 10 ஆயிரம் காய் வரை கிடைக்கும்.

வியாபாரிங்க தோட்டத்துக்கே வந்து முத்தின தேங்காய்களா பார்த்து வெட்டிப் போட்டு, காய வச்சிட்டு போயிடுவாங்க. அப்புறமா வந்து லாரியில ஏத்திட்டு போவாங்க. ஒரு காய்க்கு இப்போ 27 ரூபாய் விலை கிடைக்குது. இந்த தேங்காய்க்கு 20லிருந்து 30 ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும். வெட்டுக்கு 5 ஆயிரம் காய் கிடைச்சி, 20 ரூபாய் விலை கிடைச்சாலும் 1 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். வருசத்துக்கு 6 வெட்டுல 6 லட்ச ரூபாய் கிடைக்கும். இதுல இரண்டரை லட்ச ரூபாய் வரை செலவாகும். மீதி இருக்கிற மூன்றரை லட்ச ரூபாய் லாபம்தான்’’ என தென்னை சாகுபடியின் லாபக்கணக்குகளைத் தெரிவித்த மெய்யர், செடி மிளகுக்கு வந்த கதையையும் கூறினார்.

`` என்னோட நண்பர் சண்முகசுந்தரம் செடி மிளகு பத்தி சொன்னதால 7 மாசத்துக்கு முன்ன செடி மிளகுகளை நடவு பண்ணேன். தென்னை மரங்களைச் சுத்தி அரை அடி ஆழத்துக்கு குழி எடுத்து தொழுவுரம் போட்டு இதை நட்டிருக்கேன். ஒரு மரத்துக்கு 5, 6 செடின்னு 2 ஆயிரம் செடிகளை நடவு பண்ணிருக்கேன். நட்டவுடனே உயிர்ப்பாசனம் கொடுத்தேன். அப்புறம் தென்னைக்கு கொடுக்குற பாசனமே இதுக்கும் பாய்ஞ்சுடுது. நண்பர் சண்முகசுந்தரமே இந்த மிளகுச்செடிகள் பத்தின எல்லா தொழில்நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்தாரு. இந்த 7 மாசத்துலயே சில செடிகள்ல மிளகு காய்க்க ஆரம்பிச்சிருக்கு. ஒரு வருசத்துல எல்லா செடிகளும் முறையா காய்க்க ஆரம்பிச்சிடும். ஒவ்வொரு செடியும் சுமார் 200 கிராம் மிளகு கொடுக்கும்னு எதிர்பார்க்கிறோம்.

அப்படி கிடைச்சா 2 ஆயிரம் செடிகள்ல இருந்து அரை டன் மிளகு கிடைக்க வாய்ப்பு இருக்கு. இது 3 அடி வரைக்கும் வளர்ந்து காய்ப்பு தரும். பறிக்கிறதுக்கு ஈசியா இருக்கும். இதனால வேலைகள் சுலபமாக இருக்கும். தென்னையில மத்த ஊடுபயிர் செய்றதை விட இந்த மிளகுச்செடி ரொம்ப ஏற்றதா இருக்கும். அதுலயும் கீழயே நின்னு பறிக்குற மாதிரி இருக்குற இந்த மிளகுச்செடி இன்னும் நமக்கு பிளஸ்தான்’’ எனக்கூறி புன்னகைக்கிறார்.

தொடர்புக்கு: கோ.மெய்யர்:

76394 09797 | 98942 91818

தேங்காய் மட்டைகள்

மிளகுச்செடிகளைச் சுற்றி பிரித்தெடுக்கப்பட்ட தேங்காய் மட்டைகளை கவிழ்த்த நிலையில் வைக்கப்படுகின்றன. தென்னைக்கு அளிக்கும் பாசனம் தேங்காய் மட்டைகளுக்கு நடுவில் தேங்கி நிற்பதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மட்டைகள் பாசன நீரை உறிஞ்சி ஈரப்பதத்தை நெடு நாட்களுக்கு தக்க வைத்து செடிக்கு ஊட்டம் தருகின்றன.

தென்னை ஓலைகள்

தென்னை மரங்களில் இருந்து உதிரும் ஓலைகளை இயந்திரம் மூலம் தூளாக நறுக்கி தென்னை மரங்களுக்கு மீண்டும் உரமாக்கி போடப்படுகிறது. இது தென்னைக்கும், மிளகுக்கும் நல்ல உரமாக செயல்படுகிறது.

மா, பலா, எலுமிச்சை

இந்தத் தோட்டத்தில் மிளகு மட்டுமின்றி மா, பலா, எலுமிச்சை போன்ற பயிர்களும் ஊடுபயிர்களாக சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலமும் கூடுதல் வருமானம் பார்க்கும் மெய்யர் தோட்டத்தின் ஒரு பகுதியில் மீன் வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.