Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களின் டெபாசிட் அரசு திட்ட நிதி உட்பட உரிமை கோரப்படாமல் வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் ரூ.2 லட்சம் கோடி: பிரத்யேக இணையதளம் அமைத்தும் பலனில்லை; பிரசார முயற்சியாலும் முன்னேற்றம் இல்லை

செயல்படாத வங்கிக் கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாராலும் உரிமை கோரப்படாமல் கிடப்பில் உள்ளது. வாரிசுதாரர் இல்லாதது, வாரிசு இருந்தும் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்கள் தெரியாதது என பல காரணங்கள் உள்ளன. பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகளில் இப்படி உரிமை கோரப்படாத பணம் நிலுவையில் உள்ளது 2020ம் ஆண்டில் இருந்தே அதிகரித்து வருகிறது. இதில் பொதுத்துறை வங்கிகளில் உள்ள உரிமை கோராத பணம் 87 சதவீதத்துக்கு மேல் உள்ளது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி, கடந்த ஜூன் மாத இறுதியில் பொதுத்துறை, தனியார் வங்கிகள் உள்பட இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் பணம் ரூ.67,003 கோடி.

இதில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.58,330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8,673 கோடியும் உரிமை கோரப்படாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.19,329 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,910 கோடி, கனரா வங்கியில் 6,278 கோடி உள்ளது. தனியார் துறை வங்கிகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ வங்கியில் அதிகபட்சமாக ரூ.2,063.45 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது. அதைத் தொடர்ந்து எச்டிஎப்சி வங்கியில் ரூ.1,609 கோடி, ஆக்சிஸ் வங்கியில் ரூ.1,360 கோடி என உள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2017ம் ஆண்டு இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத தொகை ரூ.11,302 கோடி. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் இது ரூ.14,307 கோடியாக இருந்தது. 2020 டிசம்பரில் ரூ.24,356 கோடியாகவும், 2021 டிசம்பரில் ரூ.31,077 கோடியாகவும் ஆனது. கடந்த 2024ம் ஆண்டில் இந்த நிலுவை இரண்டு மடங்காக, அதாவது ரூ.78,213 கோடியாக அதிகரித்தது. பலருக்கு வங்கியில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் உரிமை கோரப்படாமல் கிடக்கிறது என தெரிவதில்லை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பணத்தை அவர்கள் திரும்பப் பெறவும் 100 நாட்கள் 100 பேருக்கு பணம் என்ற பிரசாரத்தை ரிசர்வ் வங்கி 2023ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி துவக்கியது.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட்களைக் கண்டறிந்து, அவற்றை உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என்பது இதன் நோக்கம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வங்கியும் முதல் 100 உரிமை கோரப்படாத டெபாசிட்களை 100 நாட்களுக்குள் கண்டறிந்து தீர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி மீண்டும் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, உரிய வாரிசுதாரர் அல்லது உரிமையாளரை கண்டறிந்து பணத்தை ஒப்படைக்கும் வங்கிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. வங்கிகள், மியூச்சுவல் பண்டுகள் உட்பட சுமார் ரூ.2 லட்சம் கோடிக்கு மேற்பட்ட நிதி முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட், பிஎப் மற்றும் இதர நிறுவனங்களில், அறக்கட்டளைகளில் உரிமை கோரப்படாத சுமார் ரூ.1.84 லட்சம் கோடிக்கும் மேலான நிதியை உரியவரிடம் ஒப்படைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஒரு சில பகுதிகளில் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் 133 வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.1.4 லட்சம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்கள் உறுதி செய்கின்றன. இதனிடையே, மேற்கண்ட நிதியில் இருந்து உரிமை கோராத பணம் ஒப்படைக்கப்பட்டது தொடர்பான விவரங்களை திரட்டிய தனியார் அமைப்புகள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளன. அதன்படி, பொதுமக்கள் நல நிதி, ஊழியர்களுக்கான நிதி உள்பட பல ஆயிரம் அரசு கணக்குகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முடங்கியுள்ளது தெரிய வந்தள்ளது. ராணுவத்துக்கான நிதியும் முடங்கியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி டெல்லி ஜன்பத் கிளையில் தேசிய பண்பாட்டு நிதி, டெல்லி பவிஷ்ய நிதி பவனில் உள்ள கணக்கில் பிஎப் பணம், பிரதமர் கிராம சாலைத் திட்டம், ஜவஹர் ரோஸ்கர் யோஜனா எனப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் சில வங்கி கணக்குகள், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கிக் கணக்கில் எல்ஐசி மியூச்சுவல் பண்ட், இந்திரா ஆவாஸ் யோஜனா எனப்படும் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் புனே பாரத ஸ்டேட் வங்கி கிளையில் உள்ள கணக்கில் உள்ள பணம் என 15க்கும் மேற்பட்ட அரசு நிதி, அறக்கட்டளை நிதிகளில் இருந்து பயனாளிகளால் உரிமை கோரப்படாமல் அல்லது பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் சுமார் ரூ.1.5 லட்சம் கோடி கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் உங்கள் பணம் உங்கள் உரிமை என்ற பெயரில் 2வது முறையாக துவக்கப்பட்ட பிரசாரமும் தோல்வியடைந்து விட்டதா என்ற கேள்விகள் எழுப்பியுள்ளன. இந்த பிரசாரம் டிசம்பர் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 25 மாவட்டங்களில் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற்ற முதல் கட்ட பிரசாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவுமில்லை. உரிமை கோராதவை என வகைப்படுத்தப்பட்டு ரிசர்வ் வங்கியின் டெபாசிட்தாரர் விழிப்புணர்வு நிதியில் சேர்க்கப்பட்ட தொகையில் சொற்ப தொகையே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முகவரி மாற்றம் உட்பட பல காரணங்களால் உரிமையாளர்களை கண்டறிய முடியவில்லை என சில வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், தகவல் தொழில்நுட்பமும், நவீன வசதிகளும் பரந்து விரிந்துள்ள இந்த காலக்கட்டத்தில் ஒன்றிய அரசும் ரிசர்வ் வங்கியும் உரிய வழிகளை கண்டறிந்து பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வங்கி வாரியாக

உரிமைகோரப்படாத

டெபாசிட்கள்

பொதுத்துறை வங்கிகள்

வங்கி உரிமை கோராத பணம்

பேங்க் ஆப் பரோடா ரூ.5,277 கோடி

பேங்க் ஆப் இந்தியா ரூ.3,933 கோடி

மகாராஷ்டிரா வங்கி ரூ.1,134 கோடி

கனரா வங்கி ரூ.6,278 கோடி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ரூ.2,091 கோடி

இந்தியன் வங்கி ரூ.3,739 கோடி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.2,385 கோடி

பஞ்சாப் சிந்து வங்கி ரூ.831 கோடி

பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.6,910 கோடி

யூகோ வங்கி ரூ.1,311 கோடி

யூனியன் வங்கி ரூ.5,104 கோடி

பாரத ஸ்டேட் வங்கி ரூ.19,329 கோடி

மொத்தம் ரூ.58,330 கோடி

தனியார் வங்கிகள்

வங்கி உரிமை கோராத பணம்

ஐடிபிஐ வங்கி ரூ.589 கோடி

கத்தோலிக்க சிரியன் வங்கி ரூ.88 கோடி

சிட்டி யூனியன் வங்கி ரூ.131 கோடி

தன்லட்சுமி வங்கி ரூ.101 கோடி

பெடரல் வங்கி ரூ.347 கோடி

ஜம்மு & காஷ்மீர் வங்கி ரூ.363 கோடி

கர்நாடகா வங்கி ரூ.330 கோடி

கரூர் வைஸ்யா வங்கி ரூ.258 கோடி

நைனிடால் வங்கி ரூ.43 கோடி

ரத்னாகர் வங்கி ரூ.54 கோடி

சவுத் இந்தியன் வங்கி ரூ.283 கோடி

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி ரூ.162 கோடி

ஆக்சிஸ் வங்கி ரூ.1,360 கோடி

டிசிபி வங்கி ரூ.92 கோடி

எச்டிஎப்சி வங்கி ரூ.1,609 கோடி

ஐசிஐசிஐ வங்கி ரூ.2,063 கோடி

இண்டஸ் இண்ட் வங்கி ரூ.185 கோடி

கோடக் மகிந்திரா வங்கி ரூ.558 கோடி

யெஸ் வங்கி ரூ.52.31 கோடி

பந்தன் வங்கி ரூ. 47 லட்சம்

மொத்தம் ரூ.8,673 கோடி

* உரிமை கோர உத்காம் இணையதளம்

உரிமைகோரப்படாத டெபாசிட்களை டெபாசிட்தாரர்களின் வாரிசுகள் திரும்பப்பெற உதவும் வகையில் பிரத்யேகமாக உத்காம் (https://udgam.rbi.org.in) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்து, டெபாசிட் விவரங்களை தேடலாம். உரிமை கோராமல் நிலுவையில் இருக்கும் டெபாசிட் தொடர்பான விவரங்கள் udgam.rbi.org இணையதளத்தில் உள்ளன. உரிமை கோர விரும்புவோர், முதலில் தங்கள் பெயர் மொபைல் நம்பரை உள்ளீடு செய்து இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர் பெயர், பான் எண், வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளீடு செய்து விவரங்களை தேடலாம். நிறுவன கணக்குகளாக இருந்தால் நிறுவன பெயர், பான் எண், சிஐஎன் அல்லது நிறுவனம் தொடங்கிய தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். கடந்த ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 8,59,683 பேர் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். பல வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட் தொகையை ஒரே இடத்தில் தேட இது வகை செய்கிறது. 30 வங்கிகளில் உள்ள டெபாசிட்களை பெற இந்த இணையதளம் உதவும்.

* பணத்தை பெறுவது எப்படி?

ரிசர்வ் வங்கியின் டெபாசிட்தாரர் விழிப்புணர்வு நிதியில் தங்களுக்கு உரிமை உள்ள பணம் உள்ளது என்பதை உத்காம் இணையதளம் மூலம் அறிந்து கொண்ட பிறகு, அருகில் உள்ள வங்கியை அணுகி, ஆதார், டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அட்டை ஆகியவற்றையும் வாரிசுதாரர் என்பதை நிரூபணம் செய்வதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் பணம் உங்கள் உரிமை பிரசார முகாம் மூலமாகவும் இவற்றை பெற முயற்சிக்கலாம்.