சென்னை: மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் மத சிறுபான்மையினர் உள்பட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. முதற்கட்ட சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்ட திருத்தத்தை மேற்கொள்வது எந்தவகையில் நியாயம்? தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அனைவரின் பெயரையும் 30 நாட்களில் எப்படி சரிபார்க்க முடியும்?
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக, பீகாரில் நடந்ததை போல் தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்பட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவே, சிறப்பு தீவிர திருத்தம் என்ற குழப்பமான நடைமுறையை விடுத்து, ஏற்கனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் என்று தவெக வலியுறுத்துகிறது.
நம் மண்ணின் மற்றும் மக்களின் உரிமையை காக்க அரசியல் வேற்றுமைகளை புறந்தள்ளி, இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவெக உறுதியாக இருக்கிறது. ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டால், அது ஒன்றிய பாஜ அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், சமரசமின்றி எதிர்ப்பதில் தவெக எப்போதும் போல் உறுதியாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
