Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயன்றால் அரசு எதிர்க்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயன்றால் அதை அரசு எதிர்க்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, மண்ணடி காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோயிலில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கோயிலின் 5 நிலை ராஜகோபுரத்தினை உயர்த்தும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, சென்னை, பூங்கா நகரில் தமிழ்நாட்டு கோயில் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை 4 கன்டெய்னர் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கும் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் ஜனவரி மாதத்திற்குள் 4,000 கோயில்களின் குடமுழுக்கு நிறைவு செய்து இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஆன்மிக புரட்சியை அமைதியாக நடத்திக் கொண்டிருக்கின்றது.

இந்த அரசு பொறுபேற்ற பிறகு, உறுதித்தன்மை வாய்ந்த கோயில்கள், ராஜகோபுரங்கள் காலசூழ்நிலைக்கு ஏற்றார்போல் தரை மட்டம் உயர்ந்து இருக்கின்ற அளவில் அவற்றை இடித்து கட்டுவதற்கு பதிலாக பொதுப்பணித் துறையிடம் அனுமதி பெற்று, அதன் உறுதிதன்மையை உறுதி செய்த பின் தாழ்வாக இருக்கின்ற கோயில்களை உயர் நிலைக்கு (லிப்டிங்) கொண்டு வருகின்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை 25 கோயில்களில் மேற்கொண்டது.

அதில் 11 கோயில்களின் பணிகள் நிறைவுற்றுள்ளன. இதர 14 கோயில்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.  சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாத இறுதிக்குள் மேலும் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும், 2026 ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளும் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆன்மிகம் சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் எந்த மாநில மக்களாக இருந்தாலும், பிற நாடுகளாக இருந்தாலும் உதவுகின்ற அரசுதான் திராவிட மாடல் அரசாகும். பாரதிய ஜனதா கட்சியினர் வட மாநிலங்களில் வேண்டுமென்றால் அவர்கள் நினைத்த மாதிரியான காரியங்கள், செயல்பாடுகளை நிறைவேற்றலாம். ஆனால் இங்கு அவர்களின் கனவு பகல் கனவாக தான் இருக்கும். இது ராமானுஜர் வாழ்ந்த மண்.

ஆகவே மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணி காக்கப்படும். இது போன்ற செயல்களை நிச்சயம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மக்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நயினார் நாகேந்திரனுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். சனாதானத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரே என கேட்கிறீர்கள். நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை, எந்த ஒரு பொருளையும் மையப்படுத்தி மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்று தான் கூறுகிறோம்.

சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றதால் அதை எதிர்க்கின்றது இந்த அரசு. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் மங்கையர்க்கரசி, சிறப்பு பணி அலுவலர் சி. லட்சுமணன், இணை ஆணையர்கள் மோகனசுந்தரம், கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் பி. ஸ்ரீராமுலு, உதவி ஆணையர்கள் பாரதிராஜா, க.சிவக்குமார், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர்கள் மோகன், அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.