Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களுக்கே பாதிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. டிரம்பின் ஆசியோடு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிண்ட்சேகிரகாம், ரிச்சர்ட் புளூமெந்தால் ஆகியோரால் ‘ரஷ்யாவிற்கு எதிரான தடைச்சட்டம் 2025’ என்ற மசோதா புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. ‘`ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்காவில் 500 சதவீதம் வரி விதிக்க வேண்டும்’’ என்பதே இந்த மசோதாவின் முக்கிய அம்சமாகும்.

இந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டாலும், செயல்படுத்துவதும், தடுப்பதும் முற்றிலும் எனது முடிவாகவே இருக்கும் என்ற எச்சரிக்கை ஒன்றையும் டிரம்ப் விடுத்துள்ளார். அமெரிக்காவின் பேச்சை பொருட்படுத்தாமல் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு பொருளாதாரத்தில் ெபரும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி ரஷ்யா மீது அமெரிக்கா வீசும் பொருளாதார அஸ்திரம், இந்தியாவிலும் பாதிப்புகளை உருவாக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் தேவைக்கான எண்ணெய்யில் 36 சதவீதம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டு (2025) ஜூன் மாதத்தில் இருந்து தினமும் 2.2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்தியாவிற்கு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து மொத்தம் 52.73 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது.

ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் எண்ணெய் கிடைக்கிறது. இதன் காரணமாக நாட்டின் எரிசக்தி செலவு குறைகிறது. இந்த நிலையில் தான், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க மசோதாவில் சூசகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க ரஷ்ய எண்ணெய் இறக்குமதி என்பது ஹோர்முஸ் நீரிணையை சார்ந்து இல்லாமல் சூயஸ் கால்வாய், பசிபிக் பெருங்கடல் வழியாக வருகிறது.

இது, மத்தியகிழக்கு போர் பதற்றங்களின்போது இந்தியாவிற்கு நம்பகமான மாற்று வழியாக உள்ளது. இதன் காரணமாகவும் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. பாதுகாப்போடு பொருளாதாரத்திற்கும் ஏற்ற வகையில் ரஷ்யாவின் வர்த்தகம் இந்தியாவில் தொடர்கிறது. இது தொடர்ந்தால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாடு, விலையை பன்மடங்கு உயர்த்தும். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

வர்த்தகம் மற்றும் வருமான இழப்பையும் சந்திக்கும் நிலை உருவாகும். அதிலும் குறிப்பாக இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி துறைகளான ஜவுளி, மருந்து, தகவல் தொழில்நுட்ப சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். இது ஒரு புறமிருக்க, ரஷ்ய எண்ணெய்யை தவிர்த்து இந்தியா, வேறுநாடுகளிடம் எண்ணெய் வாங்கும் முடிவை எடுக்கலாம். அதற்காக செலவுகளை உயர்த்தி, பணவீக்க பாதிப்பை உருவாக்கலாம்.

இந்த மாற்றங்கள் நேர்ந்தாலும் இந்திய மக்களின் பயன்பாட்டுக்கான எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவே செய்யும். மொத்தத்தில் பெரியண்ணன் ரீதியில் பிறநாடுகளின் மீது டிரம்ப் நடத்தும் அதிரடிகளால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான் என்கின்றனர் சர்வதேச பார்வையாளர்கள்.