Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களின் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது: அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது என்று உடன் பிறப்பே வா கூட்டத்தில் திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். ‘உடன்பிறப்பே வா’ எனும் திமுக நிர்வாகிகளின் மனம் திறந்த சந்திப்பின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை அதில் பங்கேற்ற ஒவ்வொரு தொகுதியின் நகர-ஒன்றிய - பகுதி - பேரூர் நிர்வாகிகள் நன்கு அறிவார்கள். அவர்களின் உணர்வுப்பூர்வமான அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்ததை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 முதல் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்துடனான மாபெரும் பரப்புரைப் பயணத்தையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது.

‘இதில் பயிற்சி பெற்றுள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள், 234 தொகுதிகளிலும் உள்ள 68 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நியமிக்கப்பட்டுள்ள திமுகவின் இளம் நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்து, மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் நிர்வாகிகள் வழிகாட்டுதலுடன் அவரவர் வாக்குச்சாவடிக்குப்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, மக்களை நேரில் சந்தித்து, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெற்றுள்ள பயன்களை உறுதி செய்து, ஓரணியில் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொண்டர்களையும் பொதுமக்களையும் அரவணைக்கும் திமுகவின் பாதை தெளிவானது. பயணம் உறுதிமிக்கது. இடையூறுகள்-அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு அனைத்து உடன்பிறப்புகளையும் ஒன்றிணைத்து பெருமைமிக்க திமுகவின் உடன்பிறப்பே உன்னால் உருவாகும் “ஓரணியில் தமிழ்நாடு” என்று! பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். இதில், இதுவரை 77,34,937 பேர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளார்கள்.

மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா! எனும் தலைப்பில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களுக்கு உற்சாகமூட்டி, புத்தகங்கள் வழங்கி கலந்துரையாடி தொகுதி நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அதில், தலைவருடனான பல பழைய பசுமையான நினைவுகளை நிருவாகிகள் நினைவுப்படுத்தி மகிழ்ந்தார். மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகளிடம் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது.

மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனக் கேட்டறிந்தார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் அதில் தாமாகவே முன்வந்து இணைத்து கொள்ளும் அளவிற்கு தாங்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கி வருகிறார். மேலும், மாணவ- மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களைச் சந்திக்கும்போது, அவர்களிடம் பெரியாரின் சமூகநீதி வழியிலும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாமல், அண்ணா வகுத்துத் தந்த பாதையிலும், கலைஞரின் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உலகத்தால் மனிதன் எனும் வழியில் அணுக வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சிறப்பாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் குறிப்பாகப் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற மக்களின் பேராதரவு பெற்ற திட்டங்களையும், அதன் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும், இதில் எந்தவித சுணக்கமுமின்றி விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடியபோது, முதலில் அவர்களின் சொந்த தொழில், விவசாயப் பணிகள், குடும்ப நிலவரங்கள், அவர்களது வேலைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கியது என்பது, நிர்வாகிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும், அவர்கள் பகுதிகளில் உள்ள பொதுநல கோரிக்கைகளான உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களை நிர்வாகிகளின் முன்னிலையிலேயே தொடர்புகொண்டு பல கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கு நிர்வாகிகள் தங்களது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13.6.2025-அன்று தொடங்கப்பட்ட உடன்பிறப்பே வா! திமுக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வானது, இதுவரை 12 நாட்கள் நடைப்பெற்றுள்ளது. அதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி வட்டம்-நகர-ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகளை சந்தித்து, கலந்துரையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது.

அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல; உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் வளர்ந்து வரும். இந்த வெற்றியை பெற்றுத்தர நீங்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.