Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செங்கோட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள்

*தீர்வு காண வலியுறுத்தல்

திருச்செங்கோடு : ஆன்மீக சுற்றுலாத்தலமான திருச்செங்கோடு, வருவாய் கோட்டத்தின் தலைநகராகவும், ஒரு பெரிய சாலை சந்திப்பாகவும் விளங்குகிறது. சேலம், சங்ககிரி, குமாரபாளையம், ஈரோடு, பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், ஜேடர்பாளையம் மற்றும் இறையமங்கலம் பகுதியிலிருந்து வரும் சாலைகள் திருச்செங்கோட்டில் கூடுகின்றன.

இங்கு, ஜவுளித்தொழில் மற்றும் வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில், லாரித்தொழில், ரிக் தொழில் வளர்ச்சியால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. திருச்செங்கோடு வட்டாரத்தில் பள்ளி, கல்லூரிகள் நிறைந்துள்ளதால், அதிகளவிலான வாகனங்கள் மாணவ -மாணவிகளுக்காக இயக்கப்படுகின்றன.

கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோவை, கேரளா செல்ல திருச்செங்கோடு வழியாகவே செல்ல வேண்டும். இதன் காரணமாக வாகன போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நகரில் உள்ள நான்கு ரத வீதிகளில் திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், நகை மற்றும் ஜவுளிக்கடைகள், வங்கிகள் உள்ளதால் டூவீலர்கள், கார்களை அப்படியே நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால், சாலைகள் குறுகலாகி விடுகின்றன. சுமார் 60 ஆண்டுக்கு முன்பிருந்த சாலைகளே தற்போதும் வாகன போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் இங்குள்ளது.

அமாவாசை, கிருத்திகை போன்ற விசேச நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பவுர்ணமி கிரிவலம் செல்லும் நாட்களில் கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாக இருக்கும். முகூர்த்த நாட்களில் மலையில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடப்பதால் அன்றைய தினம் நாமக்கல் சாலையில் அதிக வாகனங்கள் செல்லும்.

போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல இயலாத சூழல் நிலவுகிறது. கொக்கராயன்பேட்டை சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால் ஈரோடு, கோவை செல்லும் வாகனங்கள் இந்த வழியாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்துள்ளது.

நான்கு ரத வீதிகளிலும் கார்கள், டூ வீலர்கள் அதிகம் நிறுத்தப்படுவதால் நெரிசல் அதிகமாகிறது. போக்குவரத்து நெரிசலை போக்க ரிங் ரோடு திட்டம் அவசியமாகியுள்ளது.

சிலர் தங்கள் நிலங்கள், மரங்களுக்குரிய இழப்பீடு குறைவாக இருப்பதாக நீதி மன்றங்களுக்கு சென்று தடையாணை பெற்றுள்ளதால் ரிங் ரோடு பணிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் அமைக்க அரசு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்தது.

ஆனால், இடம் தேர்வு செய்வதில் எதிர்ப்பு கிளம்பியதால், பணியை கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது, புதிய பஸ் நிலையத்தையும், பழைய பஸ் நிலையத்தையும் இணைத்து இப்பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன் மூலம் வாகன போக்குவரத்து நெரிசல் குறையுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல முடியும் என்கின்றனர்.

இதற்கிடையில் ரிங் ரோடு பணிகளை போர்கால அடிப்படையில் முடுக்கி விட்டு திருச்செங்கோடு மக்களுக்கு தலைவலியாக இருக்கும் வாகன நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது...