*உட்கார இடமின்றி கால் கடுக்க நிற்பதாக புகார்
நல்லம்பள்ளி : நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம், சந்தை வளாகம் அருகே செயல்படுகிறது. நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட 32 ஊராட்சியில் உள்ள தண்டுகாரம்பட்டி, பாளையம் புதூர், இண்டூர், மதேமங்கலம், தொப்பூர், இலளிகம், நாகர்கூடல், கம்மம்பட்டி, ஏலகிரி, சிவாடி போன்ற 300க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு அலுவலகத்திற்கு வரும் பொது மக்களுக்கு தாலுகா அலுவலகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சமீபத்தில் பெய்த மழைக்கு தாலுகா அலுவலகத்தை சுற்றியும் செடிகள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் எங்களுக்கு தேவையான பிரச்னைகள் குறித்து மனு கொடுக்க வருகிறோம். எர்ரபையனஅள்ளி கிராமத்தில் இருந்து தாலுகா அலுவலகத்துக்கு நேரடியாக வந்துசெல்ல பஸ் வசதி இல்லை. இதனால் சுமார் 25 கி.மீ., தூரத்தில் உள்ள தர்மபுரிக்கு அரசு பஸ்சில் வந்து, அங்கிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்திற்கு வரவேண்டியுள்ளது. இதனால் 34 கி.மீ., வருகிறோம்.
இதேபோன்று கம்மம்பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்கள், 24 கி.மீ., தொலைவில் இருந்து தாலுகா அலுவலகம் வருகின்றனர். பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தொலைவில் இருந்து கோரிக்கை மனுக்களுடன் அலுவலகத்திற்கு வருகிறோம். ஆனால் தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி, கழிவறை வசதி சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அலுவலர்களை பார்க்க நீண்ட நேரம் கால் கடுக்க நிற்கிறோம். உட்கார சேர்கள் கூட கிடையாது.
திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்த, அலுவலகத்தை சுற்றி செல்லும் போது, மழைக்கு முளைத்த செடிகளால் முட்புதர்களும், விஷ பூச்சிகளும் உள்ளது. அவ்வப்போது அலுவலகம் அருகே பாம்புகள் உலா வருகிறது. எனவே தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர், கழிவறை வசதியும், அலுவலர்களை பார்க்கும் வரை அமர்ந்துகொள்ள இருக்கை வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.