*அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்
தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே கல்பண்டை மலை கிராமத்தில் வசிக்கும் மக்கள் 2 மைல் தூரம் நடந்து சென்று, ஆபத்தான நிலையில் குட்டையில் நீரை குடங்களில் எடுத்து வந்து அருந்தும் நிலை உள்ளது.
இப்பகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சியில் உள்ள தொழுவபெட்டா, குள்ளட்டி, கடமகுட்டை ஆகிய கிராமங்களுக்கு போதிய சாலை வசதி இல்லை.
மலை உச்சியில், அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சியில் உள்ள இந்த கிராமங்களில், மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தேன், கல்பாசி, கடுக்காய் உள்ளிட்ட வன மகசூல் சேகரிக்கும் தொழில் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்த மலைகிராமங்களில் சாலை, மருத்துவம், குடிநீர், கல்வி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என்பது, இன்று வரை பூர்த்தி ஆகாமல் உள்ளன.
ஒன்றிய, மாநில அரசு மலைவாழ் மக்களுக்கு பல்வேறு சலுகைகள், திட்டங்களை அறிவித்தாலும், இங்குள்ள கிராமங்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலுமாக இல்லாததால், அரசின் திட்டங்கள் இன்னும் மக்களை சென்றடையவில்லை. தொழுவபெட்டா கிராமத்தில் இருந்து 2 மைல் தொலைவில் கல்பண்டை என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
வனப்பகுதி ஒட்டிய இக்கிராமத்திற்கு சாலை வசதி, குடிநீர் வசதி முற்றிலுமாக இல்லாததால், அப்பகுதி மக்கள் கிராமத்தில் உள்ள குட்டையில் தேங்கும் நீரை காலம் காலமாக பருகி வருகின்றனர். யானைகள் நடமாட்டம் உள்ள குறுகலான கரடு முரடான ஒத்தையடி பாதையில் 2 மைல் நடந்து சென்று, ஆபத்தான நிலையில் உள்ள குட்டையில், குடங்களில் தண்ணீர் சேகரித்து கொண்டு சென்று உபயோகிக்கின்றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து மலை கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முற்றிலுமாக இல்லை. இதனால் குடிநீருக்காக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உலாவும் பகுதிக்கு 2 மைல் தூரம் நடந்து சென்று, குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரை கொண்டு வந்து பயன்படுத்தி வருகிறோம். வயதானவர்கள், சிறுவர்கள் குட்டையில் இறங்கி தண்ணீர் எடுப்பதால், வழுக்கி விழுந்து நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கோடை காலங்களில் குட்டை வறண்டு, அந்த தண்ணீரும் கிடைப்பதில்லை.
அந்த குட்டையில் ஊற்று தோண்டி தண்ணீர் கொண்டு செல்கிறோம், மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பி விடுவததால், அந்த தண்ணீரை குடிக்கும் போது பல்வேறு உடல் உபாதைகள் எற்படுகிறது. மேலும் வனப்பகுதி கிராமம் என்பதால் காற்று, மழைக்கு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நாள் கணக்கில் மின்சாரம் வருவதில்லை. அப்படியே சரி செய்தாலும் குறைந்த அழுத்த மின் விநியோகம் கிடைப்பதால், மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது.
தொழுவபெட்டா கிராமத்திற்கு சாலை வசதி செய்து கொடுத்து, எங்கள் கிராமத்திற்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என இரண்டு தலைமுறையாக கேட்டு வருகிறோம். எனவே, மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.