ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வூதிய தொகையை ரூ.4 ஆயிரத்தில் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கினார். 2025-26ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்புகளில் “திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலை ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு தற்போது ரூ.4,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் ரூ.5,000 ஆகவும், துறை நிலை குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.2,500 ஆக உயர்வு செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டது. “தொழிலாளர் சேமநலநிதி ஓய்வூதியம் பெறும் திருக்கோயில் பணியாளர்கள் தற்போது ரூ.900 முதல் ரூ.2,190 வரை மட்டுமே ஒய்வூதியமாக பெற்று வருகின்றனர். இவர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியம் பெறும் பணியாளர்களுக்கு இணையாக கருணைத்தொகை வழங்கப்படும். இத்தொகை ஆணையர் அலுவலகத்தில் பேணப்படும் மையநிதி வட்டித் தொகையிலிருந்து வழங்கப்படும் என்றும், மேலும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் கருணைத்தொகை வழங்கப்படும்“ என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளை செயல்படுத்திடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில், துறை நிலையிலான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தொகை ரூ.5,000 மற்றும் உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத்தொகை ரூ.2,500க்கான காசோலைகளையும், தொழிலாளர் சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு துறை நிலையிலான ஓய்வூதியத்திற்கு இணையாக கருணைக்தொகையை அளித்து அதற்கான காசோலைகளையும் வழங்கினார். இதன்மூலம் துறை நிலையிலான மற்றும் தொழிலாளர் சேமநலநிதி மூலம் ஓய்வூதியம் பெறும் 3,037 ஓய்வூதியதாரர்கள் மற்றும் 769 குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தர், கூடுதல் ஆணையர்கள் பழனி, ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.