ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றம்; மொபைல் ஐஎம்இஐ மாற்றினால் ரூ.50 லட்சம் அபராதம்; 3 ஆண்டு சிறை: தொலைத்தொடர்பு துறை அறிவிப்பு
புதுடெல்லி: மொபைல் போன்களின் 15 இலக்க ஐஎம்இஐ எண் உட்பட தொலைத்தொடர்பு அடையாளங்களை மாற்றுவது, ஜாமீனில் வெளிவராத குற்றங்களாகும். மேலும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் ேசர்ந்து விதிக்கப்படலாம் என்று தொலைத்தொடர்புத் துறை நேற்று தெரிவித்துள்ளது. அனைத்து உற்பத்தியாளர்கள், பிராண்ட் உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனையில் இதுதொடர்பாக சட்ட உத்தரவை முழுமையாகப் பின்பற்றுமாறு உத்தரவிட்டுள்ளது. தொலைத்தொடர்பு சட்டம், 2023ன் கீழ் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.


