மயில் சிலந்தி (Peacock spider) என்பது சிலந்தியில் ஒரு வகையாகும். தாவும் சிலந்தி வகையில் மயில் சிலந்தியும் ஒன்று. மராடஸ் வோலன்ஸ் (Maratus volans) என்ற இனத்தைச் சார்ந்தது இவ்வகை சிலந்திகள். சிலந்தி வகைகளில் மிகவும் அழகான சிலந்தி மயில் சிலந்தி. இதன் அழகான நடனமே இதற்குக் காரணப் பெயராக அமைந்தது. சிலந்தியின் முதுகுப் பகுதி நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை போன்ற நிறங்களை உடையது. இனச் சேர்க்கைக்கு முன்பாக பெண் சிலந்தியை உடன்படச் செய்வதற்காக ஆண்சிலந்தி வயிற்றுப் பகுதியை உயர்த்தி தனது மூன்று ஜோடிக் கால் களையும் உயர்த்தி ஆடத் தொடங்கும். பெண் சிலந்திகளில் இந்த நிறங்கள் மிகவும் வெளிறிக் காணப்படும்.
ஆண் சிலந்தியின் ஆட்டம் பிடிக்காமல் போனாலோ அல்லது பெண் சிலந்தி ஏற்கனவே கருவுற்று சினையாக இருந்தாலோ பெண் சிலந்தி அதன் மேல் தாவிச் சென்று கொன்று தின்றுவிடும். திறமையான ஒருசில ஆண் சிலந்திகள் வேகமாகத் தாவி தப்பித்து விடும். பெரும்பாலான நேரங்களில் சாவைச் சந்திக்க நேரிடும். சிறப்பாக ஆடி சேர்க்கைக்கு உடன்பட்ட பிறகுகூடக் கொன்று தின்று விடும் சிலந்திகளும் இந்த வகையில் உண்டு. பெண் சிலந்தியானது தனது சந்ததியில் வரும் சிலந்திகள் மிகவும் அழகாகவும் ஆதிக்கம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புவதே ஆண் சிலந்திகளை அதிக நேரம் ஆடுவதைப் பார்த்து துன்புறுத்தக் காரணம் என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள். இந்த சிலந்திகளால் மனிதனுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.
 
  
  
  
   
