கீவ்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டால் பாதுகாப்பு உத்தரவாதமாக போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு துருப்புகளை அனுப்புவதாக 26 நாடுகள் உறுதியளித்துள்ளன என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார். போர் முடிந்த பின், உக்ரைனின் பாதுகாப்புக்காக பல நாடுகளின் படைகளை அங்கு அனுப்புவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விளாடிவாஸ்டாக்கில் ஒரு நிகழ்ச்சியில் நேற்று பேசிய ரஷ்ய அதிபர் புடின், அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் உக்ரைனில் அமைதி காக்கும் படைகளை நிறுத்தக்கூடாது. அப்படி,வெளிநாட்டு படைகள் நிறுத்தப்பட்டால் அது ரஷ்யாவின் சட்டபூர்வ இலக்காக இருக்கும். வெளிநாட்டு படைகளை நிறுத்துவது நீண்ட கால அமைதிக்கு உகந்ததாக இருக்காது. மேலும் உக்ரைனின் மேற்கு நாடுகளுடனான நெருக்கமான ராணுவ உறவுகள் மோதலின் மூல காரணங்களில் ஒன்றாகும் என்றார்.