சென்னை: பா.சிதம்பரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டம், கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழநியப்பன் செட்டியார்–இலட்சுமி அம்மாள் தம்பதிக்கு செப்டம்பர் 16, 1945 ஆம் நாளன்று நான்காவது மகனாகப் பிறந்தார். ப.சிதம்பரம் 1967ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் நாளிதழில் சிறிதுகாலம் பணியாற்றினார். சட்டம் பயின்ற இவர், மூத்த வழக்கறிஞர் நம்பியார் என்பவரிடம் இளம்வழக்கறிஞராகச் சேர்ந்து பயிற்சிபெற்றார். பின்னர் தனித்துத் தொழில்புரிந்து 1984ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞரானார்
இவர், 1972ஆம் ஆண்டில் இந்திராகாந்தியின் தலைமையிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சி. சுப்பிரமணியத்தின் பரிந்துரையால் உறுப்பினர் ஆனார். 1973ஆம் ஆண்டில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1976ஆம் ஆண்டில் காமராசர் மறைவிற்குப் பின்னர் சிண்டிகேட் காங்கிரசு என்னும் நிறுவன காங்கிரசு இந்திராகாந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசோடு இணைந்தபொழுது, சி. சுப்பிரமணியன் பரிந்துரையால், அந்நாளைய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் கோ. கருப்பையா மூப்பனாரால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு 1976-77ஆம் ஆண்டில் அப்பதவியினை வகித்தார்.
இன்று பிறந்தநாள் காணும் ப.சிதம்பரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில் தெளிவு, நிதானம், எடுத்துக்கொண்ட துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவு, நீண்ட அனுபவம் ஆகியவை ஒருங்கே அமையப் பெற்ற அருமை நண்பர், ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் இந்தியாவின் உயர்வுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.