Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பட்டுக்கோட்டை அருகே புனல்வாசல் ஊராட்சியில் 78 ஆண்டுக்கு பின் முதல்முறையாக 3 கிராமங்களுக்கு பேருந்து இயக்கம்

*பேண்டு வாத்தியம் முழங்க ஆரவாரம்

*அரசுக்கு மாணவர்கள், பொதுமக்கள் நன்றி

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே 78 ஆண்டுக்கு பின் முதல் முறையாக 3 கிராமங்கள் பயன்படும் வகையில் பேருந்து இயக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள், பொதுமக்கள் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்தனர்.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த புனல்வாசல் ஊராட்சிக்கு உட்பட்டது கீழப்புனல்வாசல் கிராமம்.

இந்த கிராமத்தைச் சுற்றி வாடிக்காடு, ராமகிருஷ்ணபுரம் ஆகிய மூன்று கிராமங்களிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இதுதவிர விவசாயிகளும் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தங்கள் ஊருக்கு பேருந்து வசதி வேண்டும் என்பதுதான்.

சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து கீழப்புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனல்வாசல் நால்ரோட்டிற்கும், அதேபோல் வாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனல்வாசல் நால்ரோட்டிற்கும், ராமகிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனல்வாசல் நால்ரோட்டுக்கும் சென்றுதான் பேருந்து ஏற வேண்டும். பேருந்து வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக கால விரையத்திற்கும், பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வந்தனர் இப்பகுதி பொதுமக்கள்.

பேருந்து வசதி கேட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் நிறைவேறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமாரை சந்தித்தகீழப்புனல்வாசல் பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு பேருந்து வசதி வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை வைத்த அன்றே கீழப்புனல்வாசல் கிராமத்திற்கு சென்ற எம்எல்ஏ அசோக்குமார் பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கீழப்புனல்வாசல் கிராமத்திற்குச் சென்று பேருந்து வந்துசெல்வதற்கான பாதைகளை பார்வையிட்டனர்.

பின்னர் கீழப்புனல்வாசல் பொதுமக்கள், பேருந்து வந்துசெல்வதற்கு ஏதுவாக அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி பாதையை கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அமைத்தனர். அதனைத் தொடர்ந்து பேருந்து வந்து செல்லும் பாதைகளை ஆய்வு செய்த போக்குவரத்துதுறை அதிகாரிகள் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தமிழக அரசின் அனுமதியுடன் நேற்று முதல் அப்பகுதிக்கு பேருந்தை இயக்குவதற்கு முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று கீழப்புனல்வாசல், வாடிக்காடு, ராமகிருஷ்ணபுரம் ஆகிய 3 கிராமங்களுக்கு ஒருவிடிவு காலம் பிறந்ததுபோல் சுதந்திரம் அடைந்து சுமார் 78 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தமிழக அரசின் விடியல் பயண பேருந்து கீழப்புனல்வாசல் கிராமத்திற்கு வந்தது. அப்போது கீழப்புனல்வாசல், வாடிக்காடு, ராமகிருஷ்ணபுரம் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து பேண்ட், வாத்தியம் முழங்க ஆரவாரத்துடன் பேருந்தை வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பேருந்துக்கு பூசணிக்காய் சுற்றி, தேங்காய் உடைத்து உற்சாகமடைந்தனர். பின்னர் பேராவூரணி எம்எல்‌ஏ‌ அசோக்குமார் பேருந்தின் படிக்கட்டுகளை ரிப்பன் வெட்டியும், கொடியசைத்தும் பேருந்தை துவக்கி வைத்து பேருந்தில் அமர்ந்து கிராம மக்களுடன் பயணம் செய்தார். அதன் பின்னர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் முறையாக ஊருக்குள் பேருந்தை பார்த்த சந்தோஷத்தில் எங்க ஊருக்கு பஸ்விட்ட ஸ்டாலின் அப்பாவுக்கு நன்றி என முழக்கமிட்டனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த வேம்பையன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இன்று (நேற்று) வரை பேருந்து வசதி இல்லாமல் இருந்து வந்தது. எங்கள் 3 கிராம மக்களின் கோரிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த அரசும் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமாரிடம் எங்கள் கோரிக்கையை வைத்தோம். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு எங்கள் 3 கிராம மக்களின் 78 ஆண்டுகளுக்கும் மேலான இந்த கோரிக்கையை இன்று நிறைவேற்றித் தந்துள்ளது. அதற்காக ஒட்டுமொத்த கிராம மக்கள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.