திருச்சி: தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(31). இவரது உறவினருக்கு சொந்தமான 11,070 சதுரடி இடம் திருச்சி கே.சாத்தனூரில் உள்ளது. அந்த இடத்துக்கான பட்டாவில் ஆணையர், திருச்சி மாநகராட்சி என்று தவறுதலாக உள்ளதை கணினியில் மாற்றம் செய்யக்கோரி திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் விண்ணப்பித்திருந்தார்.
இந்த விண்ணப்ப நிலை குறித்து தெரிந்துகொள்வதற்காக வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரும், வட்டாட்சியருமான அண்ணாதுரை(50) என்பவரை சந்தித்துள்ளார். அப்போது அவர் மனுவை கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகுமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார்.
இதையடுத்து, போலீசார் அறிவுறுத்தலின்பேரில் ரசாயனம் தடவிய ரூ.2 லட்சத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலை சென்ற ராஜேந்திரன், அங்கிருந்த வட்டாட்சியர் அண்ணாதுரையிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அண்ணாதுரையை கைது செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துவாக்குடிமலை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
