பாட்னா: பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் உள்ளார். ராகுல்காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரையை நேற்று முன்தினம் முடித்த பிறகு நள்ளிரவில் தேஜஸ்வி பாட்னாவில் உள்ள மரைன் டிரைவ் எக்ஸ்பிரஸ்வேயில் இளைஞர்களுடன் நடனமாடும் ரீல்ஸ் எடுத்துள்ளார். இதை அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யா சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ வைரலானது.
சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த தனது மருமகனுடன், புதிதாக திறக்கப்பட்ட மரைன் டிரைவ் வழியாக சென்ற போது, அங்கு சமூக ஊடகங்களுக்கான வீடியோக்களை உருவாக்கும் இளம் கலைஞர்களின் குழுவை அவர் சந்தித்தார். அவர்களின் அழைப்பின் பேரில் ஜாலியாக நடனமாடி ரீல்ஸ் எடுத்தார். பின்னர் ஒன்றாக அமர்ந்து டீ குடித்தார். இதுதொடர்பான வீடியோக்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு,’ புதிய பீகாரை உருவாக்க உறுதியளிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.