இம்பால்; மணிப்பூரில் மருத்துவ சிகிச்சையின் அலட்சியத்தால் நோயாளி இறந்ததாகக் கூறி, உறவினர்கள் மருத்துவமனையைத் தாக்கியதில் மருத்துவர் காயமடைந்தார். மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் நேற்று மட்டும் முந்தைய 24 மணி நேரத்திற்குள் இரண்டு நோயாளிகள் உயிரிழந்தனர். சிங்சுபம் ஓங்பி என் மஞ்சு (35) என்ற பெண் அறுவை சிகிச்சைக்குப் பின் நேற்று காலையிலும், யம்பேம் சஞ்சோய் (50) என்பவர் நேற்று முன்தினம் மாலையிலும் உயிரிழந்தனர். மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இருவரும் இறந்ததாக அவர்களது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
மஞ்சுவின் மரணத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள், நேற்று மருத்துவமனைக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மருத்துவமனையின் சொத்துக்களை சேதப்படுத்தியதுடன், மருத்துவர் பிரிட்டம்குமார் உள்ளிட்ட பணியாளர்களை கடுமையாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த மருத்துவர் உள்ளிட்டோர், அதே மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை மற்றும் வழக்கமான அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் உடனடியாக நிறுத்துவதாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.