Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பத்திரம் பதியும் முன் கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

ஓடி ஓடி உழைப்பது ஒரு வயிறு சோத்துக்கும், ஒரு காணி நிலத்துக்கும் தான். என்கையில் அப்படிப்பட்ட நிலம் வாங்கும் போது நிச்சயம் கவனமாக இருக்க வேண்டும். புதிய சொத்தானாலும், பழைய சொத்தானாலும் சரி இந்த 16 ஆலோசனைகளை கடைப்பிடியுங்கள். ஏனெனில் உலகின் மிகப்பெரிய போர்களைக் கூட உருவாக்கும் சக்தி கொண்டது ஒரு நிலம்.

1 ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கு போடப் படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம்.

2 மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திரப் பதிவு. இதன்படி பதியப்படுகிறதா என கவனிக்கவும்.

3. எழுதிக் கொடுப்பவரின் பெயரும் & இனிசியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா, மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.

4. எழுதிக் கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரய பத்திரத்தில் காட்ட வேண்டும்.

5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர், இனிசியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

6. கிரயம் எழுதிக் கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம், அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம். உயில், தானம் மூலம் கிடைத்து இருக்கலாம். பொது ஏலம், நீதிமன்றத் தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம். பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனைக் கிரயம் எழுதிக் கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.

7. கிரயம் எழுதிக் கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம், ரிஷிமூலம், பார்த்து அனைத்து லிங்க் டாக்குமென்ட்யையும் வரலாறாக தற்போதைய கிரய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது.

8. கிரயம் நிச்சயித்த உண்மைத் தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.

9. கிரயம் எழுதிக் கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளைக் கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.

1. தானம், 2. அடமானம், 3. முன் கிரயம், 4. முன் அக்ரிமெண்ட், 5. உயில், 6. செட்டில்மெண்ட், 7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி, 8. ரெவின்யூ அட்டாச்மெண்ட், 9.வாரிசு பின் தொடர்ச்சி, 10. மைனர் வியாஜ்ஜியங்கள், 11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள், 12. சொத்து ஜப்தி, 13. சொத்து ஜாமீன், 14. பைசலுக்காக சர்க்கார் கடன்கள், 15. வங்கி கடன்கள், 16. தனியார் கடன்கள், 17. சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை, 18. சிவில், கிரிமினல் வழக்குகள், 19. சர்க்கார் நில ஆர்ஜிதம், 20. நிலக்கட்டுப்பாடு, 21. அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ், 22. நில உச்ச வரம்பு கட்டுப்பாடு, 23. பத்திரப்பதிவு சட்டம் 47 (அ) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை, 24. இதில் ெசால்லாத பிற வில்லங்கங்கள் இல்லை போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.

10. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்பந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதிக் கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.

11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண், தெளிவாக எழுதியிருக்க வேண்டும்.

12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும், பிரிட்டிஷ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

13. கிரய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாளப்படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதிக் கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.

15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா, அதில் எழுதிக் கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல், ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

- எஸ். ரமணி