நெல்லை:நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் தீபக்ராஜன் (28). பசுபதி பாண்டியனின் ஆதரவாளரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 20ம் தேதி பாளையங்கோட்டையில் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாளை போலீசார் நவீன், முருகன் உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் நம்பிராஜன் மட்டும் ஆஜரானார். இதில், முருகன், பவித்ரன், முத்துஇசக்கி, மற்றொரு ஐயப்பன், சங்கர் ஆகிய 5 பேர் ஆஜராகாததற்கான மனுக்கள் ஏற்கப்பட்டன. 9 பேர் ஆஜராகவில்லை. ஏற்கனவே ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஆஜராகாத 9 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மேலும் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பாளையங்கோட்டை போலீசார் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி ஹேமா விசாரித்து நம்பிராஜன் உட்பட 11 பேரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். ஜாமீன் ரத்து செய்யபட்ட சரவணன், ஐயப்பன், தம்பான், இசக்கிதுரை, முத்துசரவணன், சுரேஷ், ரமேஷ், லட்சுமணகாந்தன், வானுமாமலை, முத்து ஆகிய 10 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.