மதுரை: அதிமுக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், ஓ.பி.எஸ். உடன் ஒரே காரில் பயணம் செய்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் குரலெழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து, செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதிமுக ஒன்றிணைப்பு குறித்த செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக இருவரும் ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
