சமூக, அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்: பிரதமர் மோடி புகழாரம்!
டெல்லி: கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் பசும்பொன் தேவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் குருபூஜை பசும்பொன்னில் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. பசும்பொன்னில் இன்று தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
பிரதமர் மோடி புகழாரம்:
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்:
அடக்குமுறைச் சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது திருவுருவச் சிலைக்கும், பசும்பொன் நினைவிடத்திலும் எனது மரியாதையைச் செலுத்தினேன். மேலும் மதுரை தெப்பகுளத்தில் மானம் காத்த மருதிருவர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து வணங்கினேன். பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்ட மனநிறைவுடன் சென்னைக்குத் திரும்புகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
