ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் கூட்டாக மரியாதை செலுத்தினர். தேவருக்கு மூவரும் கூட்டாக மாலை அணிவித்ததுடன் 3 பேரும் சேர்ந்து தீபாராதனை காட்டினர்.
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தலைவர்களான ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர். அவர்கள் ஒரே வேனில் ஏறி பசும்பொன் சென்றனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பது வழக்கம். கட்சியில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனது அணி தரப்பில் தனியாக சென்று வந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியில் சேர்க்க வேண்டுமென ஓபிஎஸ் தொடர்ந்து கூறிவருகிறார்.
இதனிடையே, ஓபிஎஸ் கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கூறினார். இதனால், அதிமுகவில் இருந்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் அனைவரையும் சேர்க்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி உடன்படாத நிலையில் எடப்பாடி மீது செங்கோட்டையன் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்தார்.
ஆனாலும் செங்கோட்டையன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதோடு டெல்லி சென்று பாஜக தலைவர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் அவர் சந்தித்து வந்தார். அதேநேரத்தில் அதிமுக அதிருப்தி தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் மட்டும் பாஜக தலைவர்களை சந்திக்கவில்லை. மேலும், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த ஓபிஎஸ், அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அங்கு காரில் வந்த செங்கோட்டையன் ஓபிஎஸ்சை சந்தித்து சிறிது நேரம் பேசினார். பின்னர் இருவரும் அங்கிருந்து ஒரே காரில் புறப்பட்டு பசும்பொன் சென்றனர். காரின் முன் சீட்டில் ஓபிஎஸ் உட்கார்ந்திருக்க, அவருக்கு பின் சீட்டில் செங்கோட்டையன், முன்னாள் எம்பி சையதுகான் அமர்ந்து இருந்தனர். பின்னர் இவர்கள் சென்ற கார் சிவகங்கை மாவட்ட எல்லை அருகே சென்றபோது அந்த மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களின் வரவேற்பை இருவரும், வேனில் ஏறி பெற்றுக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து மீண்டும் காரில் ஏறி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். வழியில் திருப்பாச்சேத்தி அருகே டிடிவி தினகரனை, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு முடிந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஒரு காரிலும், டிடிவி தினகரன் தனியாக வேனிலும் பசும்பொன் நோக்கி புறப்பட்டனர்.
பசும்பொன் கிராமத்தில் நுழைவு வாயில் அருகே உள்ள ஆர்ச் அருகே ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் காரில் இருந்து இறங்கினர். பின்னால் வந்த டிடிவி தினகரன் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். பின்னர் 3 பேரும் ஒரே வேனில் ஏறி முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் சென்று ஒன்றாக அஞ்சலி செலுத்தினர்.
கட்சியில் அனைவரும் ஒருங்கிணைய வேண்டுமென செங்கோட்டையனும், ஏற்கனவே பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறிவரும் நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் சேர்ந்து ஒரே வேனில் செங்கோட்டையன் பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி இவர்கள் 3 பேரும் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து சசிகலாவை சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு அதிமுகவை மீட்பது அல்லது புதிய அதிமுகவை உருவாக்குவது, புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் இணைந்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
