நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த கொற்றிக்கோடு அருகே உள்ள மலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 13 வயது மகளுடன் அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஜெப கூடத்திற்கு செல்வது வழக்கம். பள்ளி விடுமுறை நாளில் சிறுமி அந்த ஜெபக்கூடத்தின் போதகர் (63) இல்லத்திற்கு சென்று சிறு சிறு வீட்டு வேலைகள் செய்து வந்தார். இவ்வாறு சென்ற சிறுமியை மத போதகர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சிறுமியின் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து அவரது தாய் விசாரித்தபோது, போதகர் அத்துமீறியதால் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த போதகர் குடும்பத்தினர் சிறுமியை கேரளாவுக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்ய முயற்சித்துள்ளனர். அதற்கு டாக்டர்கள் மறுப்பு தெரிவித்ததோடு போலீசாருக்கும் தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து போதகர் குடும்பத்துடன் தலைமறைவானார். தற்போது அவரைப்பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போதகருக்கு முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.