உலகின் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் பட்டியல்: அமெரிக்கா பின்தங்கியது: இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
வாஷிங்டன்: பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா முதல் 10 இடங்களுக்குள் வராமல் பின்தங்கியது. Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.
பட்டியலில் இம்முறை முதலிடத்தை சிங்கப்பூரும், இரண்டாவது இடத்தை தென்கொரியாவும், மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 193 நாடுகளுக்கு பயணிக்கலாம். ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயில், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் நான்காவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள நிலையில், பிரித்தானியா எட்டாவது இடத்திலும் கனடா ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.
அமெரிக்கா, உலகின் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இடம் பிடிக்கவே இல்லை. சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் 2014 முதல் முதலிடத்தில் இருந்து வந்த அமெரிக்கா 12வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அமெரிக்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 180 நாடுகளுக்கு பயணிக்கலாம் என்றாலும், 46 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விசா இல்லாமல் அமெரிக்காவுக்கு பயணிக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய பாஸ்போர்ட் தரவரிசையும் சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் 84வது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது மவுரித்தேனியாவுடன் இணைந்து 85வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்திய குடிமக்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது.
பாகிஸ்தானின் பாஸ்போர்ட், உலகின் மிகவும் பலவீனமான பாஸ்போர்ட்களில் ஒன்றாக மீண்டும் பெயர் பெற்றுள்ளது. 2024ம் ஆண்டில் 100வது இடத்தில் இருந்த பாகிஸ்தான், 2025ம் ஆண்டுக்கான ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் 103வது இடத்துக்குச் சரிந்துள்ளது. இதனால், பாகிஸ்தானியர்கள் தற்போது வெறும் 33 நாடுகளுக்கே விசா இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது.
பாகிஸ்தானின் பாஸ்போர்ட் தற்போது ஏமன் நாட்டுடன் இணைந்து 103வது இடத்தில் உள்ளது. அதைவிட மோசமான நிலையில் ஈராக் (104), சிரியா (105), ஆப்கானிஸ்தான் (106) ஆகிய நாடுகள் உள்ளன. பாகிஸ்தானின் பாஸ்போர்ட் மதிப்பில் ஏற்பட்ட இந்த சரிவு, அந்த நாட்டின் பொருளாதார நெருக்கடி, அரசியல் சீர்கேடு மற்றும் சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக ஹென்லி அறிக்கை கூறுகிறது.