சென்னை: மொரிஷியஸிலிருந்து சென்னை வர வேண்டிய, ஏர் மொரிஷியஸ் பயணிகள் விமானம், நேற்று 6 மணி நேரம் தாமதமாக காலை 7.50 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து அதிகாலை 3.35 மணியளவில் மொரிஷியஸ் புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர் மொரிஷியஸ் விமானம், தாமதமாக இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து அதிகாலை 3 மணியளவில் டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றது. மேலும், காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம், மூன்றரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக பகல் 1.35 மணியளவில் தூத்துக்குடி புறப்பட்டு சென்றது.
அதேபோல், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு, பகல் 1.45 மணியளவில் வரவேண்டிய தனியார் பயனிகள் விமானமும், மூன்றரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாக சென்னை வந்தடைந்தது. இதேபோல், நேற்று காலை 6 மணியளவில் சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம், காலை 9.40 மணியளவில் ஐதராபாத்திலிருந்து சென்னை வர வேண்டிய தனியார் பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் 2 ஹைதராபாத் விமானங்கள் ரத்து, மொரிஷியஸ், டெல்லி, தூத்துக்குடி ஆகிய 5 விமானங்கள், பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது. விமானங்கள் தாமதமாக இயக்கம், ரத்து காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.