நாகை: பண்டிகை காலத்தையொட்டி நாகையிலிருந்து இலங்கைக்கு வாரத்தின் 7 நாட்களும் பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது என்று தனியார் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் சிவகங்கை என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர 6 நாட்கள் கப்பல் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பண்டிகை காலத்தையொட்டி வாரத்தில் 7 நாட்களும் கப்பலை இயக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து தனியார் கப்பல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் இருநாட்டு பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை அக்டோபர் மாதத்தில் வாரம் முழுவதும் இயக்கப்படவுள்ளது. அதன்படி வரும் 14, 21, 28ம் தேதிகளில் (செவ்வாய்கிழமை) கப்பல் சேவை உண்டு. தீபாவளி பண்டிகையான வரும் 20ம் தேதி கப்பல் சேவை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டணம்
நாகையிலிருந்து இலங்கை சென்று வர ரூ.8000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகையிலிருந்து இலங்கை செல்ல ரூ.4,500ம், இலங்கையிலிருந்து நாகை வர ரூ.3500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.