Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரைவில் ‘ப்ரீபெய்டு’ ஆட்டோ திட்டம்: அதிக கட்டண வசூலை தடுக்க நடவடிக்கை

நாகர்கோவில்: அதிக கட்டணம் வசூலை தடுக்க நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரைவில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் இங்கிருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களிலும், சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட் முக்கிய நகரங்களில் இருந்து வரும் ரயில்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகிறார்கள். இவ்வாறு வரும் பயணிகள் ரயில் நிலையத்தில் இறங்கி வாடகை கார்கள், ஆட்டோக்கள் மூலம் வீடுகள் அல்லது தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்கிறார்கள். முக்கிய ரயில்கள் வரும் சமயங்களில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்களும் வடசேரி பகுதிக்கு இயக்கப்படுகிறது.

ஆட்டோக்களில் பயணம் செய்யும் போது பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மற்ற நகரங்களை விட நாகர்கோவிலில் அதிக ஆட்டோ கட்டணம் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஆனால் இந்த திட்டத்துக்கு முதலில் ரயில்வே ஒத்துழைப்பு வழங்காததால், செயல்படுத்தப்பட வில்லை. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது. இதன் மூலம் அதிக கட்டண கொள்ளையை தடுக்க முடியும் என்று பயணிகள் கூறி உள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது, நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ப்ரீபெய்டு திட்டம் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக கூறி உள்ளனர். ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் நடைமுறைக்கு வந்தால், அதிகளவில் பயணிகள் கட்டணம் கொடுக்க வேண்டி இருக்காது. ஆட்டோ டிரைவர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் கட்டணம் நிர்ணயம செய்யப்பட்டு, நியாயமான கட்டணம் வசூலிக்கப்படும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு இந்திய முக்கிய நகரங்களில் ப்ரீ பெய்டு ஆட்டோ திட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரீ பெய்டு ஆட்டோ திட்டம் நடைமுறைக்கு வந்தால், ரயில் நிலையத்தில் இருந்து இயங்க வேண்டிய ஆட்டோக்கள் அனைத்தும் முறைப்படி ரயில்வே நிர்வாகத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும். பயணிகள் வந்திறங்கியதும், ஆட்டோ கட்டணத்துக்கான கவுண்டர் அமைக்கப்பட்டு இருக்கும்.

அங்கு சென்று தாங்கள் செல்லும் பகுதிக்கான கட்டணத்தை செலுத்தி, ரசீது பெற வேண்டும். வரிசைப்படி எந்த ஆட்டோ உள்ளதோ? அந்த ஆட்டோவில் ஏறி பயணிக்கலாம். கார்களுக்கும் இது பொருந்தும். இதனால் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருக்காது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகளின் ஒரு அங்கமாக ப்ரீபெய்டு ஆட்டோ திட்டமும் இருக்கிறது ஏற்கனவே ரயில்வே துறை சார்பில் இங்கு தொடர்பாக அனுமதி அளிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஆட்டோ களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பு கொடுத்தது ரயில்வே துறை சார்பில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டால் பயணிகளுக்கு பெரும் பயன் உள்ளதாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்கள் கருத்தாகும். இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே ரயில் பயணிகள் ஆலோசனை குழு உறுப்பினர் ஸ்ரீராம் கூறுகையில், 2026க்குள் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகள் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பணிகள் முடிந்து புது பொலிவுடன் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் இயங்கும் போது ப்ரீபெய்டு ஆட்டோ திட்டமும் நடைமுறைக்கு வந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.

* டிக்கெட் முன் பதிவு மையம் அருகே கவுண்ட்டர்

ப்ரீபெய்டு ஆட்டோ திட்டத்துக்கான கவுண்ட்டர், தற்போது உள்ள டிக்கெட் முன் பதிவு மைய பகுதியிலேயே அமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான இடத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இவ்வாறு டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டு, ப்ரீபெய்டு ஆட்டோ திட்டம் நடைமுறைக்கு வந்தால், பயணிகளிடம் அதிகளவில் கட்டண கொள்ளை நடக்காது என சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர். இதற்கான கவுண்டர் ரயில்வே துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.