Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து: அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம், மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரையில் தமிழ் மொழி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும். 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி, பிளஸ் 1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முறை இருக்காது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என தனியாக கல்வி கொள்கை உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த கல்வி கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் குழு 2022ம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டறிந்து கல்வி கொள்கையை வடிவமைத்தனர். அதன்படி சுமார் 650 பக்கங்கள் கொண்ட மாநில கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை 2023-ம் ஆண்டு அக்டோபரில் தயாரானது.

ஆனாலும் வெள்ள பாதிப்புகள், நாடாளுமன்ற தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின் மாநில கல்வி கொள்கை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில், பள்ளி கல்வித்துறைக்கான, தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து. தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை குறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த மாநிலக் கல்விக் கொள்கை முழுக்க முழுக்க பள்ளிக் கல்வி சார்ந்தது மட்டுமே.

முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மாவட்ட வாரியாக சென்று கல்வியாளர்கள், மாணவர்களிடம் கருத்து கேட்டபிறகே, நமக்கான கல்விக் கொள்கையை நாம் உருவாக்கியுள்ளோம். அரசுப் பள்ளிகளை சார்ந்துள்ள மாணவர்கள் முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதற்கு காரணமே ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற அடிப்படையிலான இந்த மாநில கல்விக் கொள்கை உருவாகியுள்ளது. இந்த மாநிலத்துக்கு என்ன தேவை என்பதை புரிந்து, நமக்கான பெரிய ஆயுதமாக இருமொழிக் கொள்கைதான் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் மொழியைப் பொருத்தவரையில் எந்த வகை பள்ளியாக இருந்தாலும், தமிழ்ப்பாடம் கட்டாயம் என வைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் உள்ளடக்கிய அனைவருக்குமான கல்வியை நாம் வழங்குவது, பாலின சமத்துவம், தொலைநோக்கு பார்வையுடன்கூடிய பல்வேறு திட்டங்கள், பாடத்திட்டம் சார்ந்து செய்வது, அதில் பண்பாடு, உருவாக்குவது, மாணவர்களின் சுயசிந்தனை, மனப்பாட முறை அல்லாமல் புரிந்து கொண்டு படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவது, வாழ்வியல் சாரந்ததாகவும், விளையாட்டும் இந்த கல்வியில் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நமது கல்விக் கொள்கையை நாம் உருவாக்கி இருக்கிறோம்.

இன்றைய நடைமுறை (டிரண்ட்) என்னவோ, அது கல்வியில் சேர்க்கப்படும். அதே நடைமுறை அடுத்த ஆண்டு மாறினால் அதையும் கல்வியில் சேர்ப்போம். இன்றைய நிலையில் நமது மாநில கல்வி என்பதை பார்த்தால், மொழி சார்ந்து என்னென்ன சொல்லப்பட்டுள்ளன என்பதையும், மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு அச்சம் தரும் வகையிலான தேர்வு முறைகள் இருக்க கூடாது என்ற நோக்கிலும், மாநில அளவிலான அடைவுத் திறனில் உள்ள இடைவெளியை நீக்குவதற்காக, பள்ளிகளில் என்ன தேவை என்பதை உணர்ந்து அவற்றை கொண்டுவர நாம் நடவடிக்கை எடுக்கிறோம்.

பயிற்சியை பொறுத்தவரையில் ஆசிரியர்களுக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து, ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு பள்ளியில் ஒரு பயிற்சிக் கூடம் கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் 500 பள்ளிகள் ‘வெற்றிப் பள்ளிகள்’ என்ற வகையில் கொண்டு வரப்படும். அதற்கான ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும். உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டுதல்கள் என்று மாணவர்களுக்கு தேவையான அனைத்தும் கொண்டு வரவும், தொழில் துறைகள் சார்ந்த விவரங்களை 9ம் வகுப்பில் இருந்தே அறியச் செய்தல் போன்ற, அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த மாநில கல்விக் கொள்கையை நாம் மாற்றிக் காட்டியிருக்கிறோம்.

மாணவ மாணவியர் எந்த பின்புலத்தில் இருந்து வந்தாலும், அவர்களுக்கு தேவையான அனைத்தும் விட்டுப்போகாமல், தரமான பாடங்களை கற்பிக்கும் முறைகளை சேர்க்கும் வகையில் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்துக்கு தேவைப்படும் கருத்துகளை உள்ளடக்கிய அளவுக்கு இந்த கல்விக் கொள்கை வருங்காலத் தலைமுறையை சிந்திக்க வைக்கும் அளவுக்கு கல்விக் கொள்கை பயனுள்ளதாக இருக்கும்.

மொழியை பொறுத்தவரையில் அனைத்து வகை பள்ளிகளிலும் உயர் வகுப்புகளில் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பித்தல் கட்டாயமாக வைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, இப்போது நடைமுறையில் இருக்கும் அனைத்தும் அப்படியே இருக்கும். அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாத வகையில் செயல்படுத்தப்படும். குறிப்பாக, 3ம் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் அந்த வகுப்பில் என்ன அடைவுத் திறன் பெற்றுள்ளனர் என்பதை உறுதி செய்து விட்டு, அவர்கள் 4ம் வகுப்பு செல்வது முடிவு செய்யப்படும்.

8ம் வகுப்பிலும் அதுபோலவே எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இப்போது இருப்பது போலவே செயல்படுத்தப்படும். அதன் படி 8ம் வகுப்பு வரையான தேர்ச்சி என்பது தொடரும். கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தை கொண்டு வருகிறோமோ அதற்குரிய ஆணைகள் உடனடியாக வெளியிப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி ஒவ்வொன்றாக படிப்படியாக நடைமுறைக்கு வரும். இந்த கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை நடைமுறையில் இருந்து வருகின்றன.

விடுபட்டவை படிப்படியாக செயல்படுத்தப்படும். தேர்வு முறையில் எந்த மாற்றமும் இல்லை. பாடம் நடத்துவதில் தான் மாற்றம் செய்யப்படும். அதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்ப்பாடங்களை கற்பிக்க தனியார் பள்ளிகளுக்கும் தமிழ்ப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பொதுத் தேர்வைப் பொறுத்தவரையில் 11ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு என்பது இனி கிடையாது.

* ஆசிரியர்களுக்கு என்னென்ன தேவை என்பதை உணர்ந்து, ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு பள்ளியில் ஒரு பயிற்சிக் கூடம் கொண்டு வரப்படும்.

* தமிழ்நாட்டில் 500 பள்ளிகள் ‘வெற்றிப் பள்ளிகள்’ என்ற வகையில் கொண்டு வரப்படும். அதற்கான ஆசிரியர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

* மாணவ, மாணவியர் எந்த பின்புலத்தில் இருந்து வந்தாலும், அவர்களுக்கு தேவையான அனைத்தும் விட்டுப்போகாமல், தரமான பாடங்களை கற்பிக்கும் முறைகளை சேர்க்கும் வகையில் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

* நமது மாநிலத்துக்கு தேவைப்படும் கருத்துகளை உள்ளடக்கிய அளவுக்கு கல்விக் கொள்கை வருங்காலத் தலைமுறையை சிந்திக்க வைக்கும் அளவுக்கு கல்விக் கொள்கை பயனுள்ளதாக இருக்கும்.