*நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
போச்சம்பள்ளி : பெனுகொண்டாபுரம் பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கிருஷ்ணகிரி அணையில் இருந்து பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர், கால்வாய் மூலமாக போச்சம்பள்ளி, கோனனூர், திப்பனூர் ஏரிகள் வழியாக மத்தூர் அருகே உள்ள பெனுகொண்டாபுரம் பெரிய ஏரிக்கு செல்கிறது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணையில் இருந்து பாரூர் ஏரிக்கு திறந்து விடப்படும் நீர் ஏரியின் பாசன வாய்க்கால் வழியாக பெனுகொண்டாபுரம் பெரிய ஏரியை வந்தடைகிறது. இந்த ஏரியில் 21 அடியில் 140 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கப்படுகிறது.
சுமார் 234 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் இருந்து ஒட்டப்பட்டி, மாதம்பட்டி, கொடமாண்டப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சிகளில் உள்ள 2000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.
பெனுகொண்டாபுரம் ஏரியானது, பாரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரால் நீர்வரத்து பெறுகிறது. பாரூர் ஏரிக்கு அடுத்தபடியாக பெரிய ஏரியாக பெணுகொண்டாபுரம் ஏரி உள்ளது. மழை காலங்களில் இந்த ஏரி நிரம்பி அதன் உபரிநீர் பாம்பாறு அணைக்கு செல்கிறது.
ஆண்டின் பெரும்பாலான நாட்களில் நிரம்பி காணப்படும் இந்த ஏரியில் குத்தகைதார்கள் பரிசல்களில் சென்று மீன் பிடிப்பார்கள். பெனுகொண்டாபுரம் ஏரி நிரம்பி கடல்போல் பரந்து விரிந்து காட்சி அளிப்பதால், ஏரியை சுற்றி உள்ள மரங்களில் நீர்கொத்தி, நீர்கோழி, நாரை, கொக்கு, புறா, தூக்கணாங்குருவி, பச்சைகிளிகள் என ஏராளமான பறவைகள் காணமுடிகிறது.
இந்த ஏரி வழியாக செல்லும் போது பறவைகளின் சத்தம் ரீங்காரமாக ஒலிப்பதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை ஒரு நிமிடம் நிறுத்தி ஏரியை ரசித்து செல்கின்றனர். வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து கூடு கட்டி குஞ்சு பொரித்த பின் தங்கள் குஞ்சுகளுடன் மீண்டும் வந்த இடத்திற்கே செல்கிறது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கிருஷ்ணகிரி அணை நிரம்பி தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் தென்பெண்ணை ஆறு, நெடுங்கல் தடுப்பணை, பாரூர் பெரிய ஏரி வழியாக பெனுகொண்டாபுரம் ஏரிக்கு வந்தது. மத்தூர்- சாமல்பட்டி செல்லும் வழியிலும், போச்சம்பள்ளி -சிப்காட் செல்லும் வழியிலும் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி இந்த ஏரி உள்ளதால், அவ்வழியாக செல்வோர் ஏரியை காண குவிந்து வருகின்றனர். மேலும், செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்த ஏரியால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


