Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாரூர் ஏரியில் இருந்து கால்வாய்களை சீரமைத்த பிறகு தண்ணீர் திறக்க நடவடிக்கை

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

போச்சம்பள்ளி : பாரூர் ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கும் முன்பு, திருவயலூர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து, விநாடிக்கு 339 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 440 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 24.44 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு, நேற்று முன்தினம் 352 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று நிலவரப்படி 552 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது 43.40 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உபரி நீர் ஆற்றில் திறந்துவிடப்படும். இந்த தண்ணீர், காவேரிப்பட்டணம், பெண்னேஸ்வரமடம் வழியாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நெடுங்கல் தடுப்பணையை கடந்து செல்கிறது. நெடுங்கல் தடுப்பணையில் இருந்து பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. பாரூர் பெரிய ஏரி நிரம்பிய பின், உபரிநீர் திறந்து விடப்படுவதால், அந்த தண்ணீர் போச்சம்பள்ளி, கோணணூர் ஏரி நிரம்பிய பின் விவசாயத்திற்கு திறந்து விடப்படும். இந்த நீர் திருவயலூர் கால்வாய் வழியாக புளிம்பட்டி ஏரி, பெணுகொண்டாபுரம் உள்ளிட்ட ஏரிகளுக்கு சென்றடைகிறது. இந்த ஏரியில் நிரம்பியவுடன் தண்ணீர், பாம்பாறு அணைக்கு செல்கிறது. இதன் மூலம், அப்பகுதிகளில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்புவதுடன், நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயரும்.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் குளம், குட்டைகள், ஏரிகளில் தண்ணீர் வருவதால், திருவயலூர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது திருவயலூர் கால்வாயில் கற்கள் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், புளியம்பட்டி ஏரிக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய்களும் உடைந்து காணப்படுவதால், தண்ணீர் திறந்து விடப்படும்போது, அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு புகுந்து விடுகிறது. எனவே, கால்வாயை ஆக்கிரமித்துள்ள குப்பை, கழிவுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கால்வாய்களை சீரமைத்த பிறகு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.