கட்சி பெயர், சின்னம் தொடர்பான விவகாரம் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு: ஐகோர்ட், சிட்டி சிவில் நீதிமன்றங்களில் தாக்கல்
சென்னை: விழுப்புரத்தில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் எஸ்.ராமதாஸ் தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் பி.முகுந்தனை கட்சியின் இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு உடனடியாக பாமக தலைவர் அன்புமணி ஆட்சேபனை தெரிவித்ததிலிருந்து, தந்தை- மகன் இடையே மனக்கசப்பு தொடங்கியது. வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ், செயல் தலைவராக அன்புமணியை அறிவித்தும், தலைவராக நானே இருப்பேன், சட்டமன்ற தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன் என்றும் அறிவித்தார்.
அப்போது, தந்தை ராமதாஸ் என் மீது கோபமாக இருந்தால் அவரிடம் மன்னிப்பு கேட்பதில் தயக்கம் இல்லை என்று அன்புமணி தெரிவித்தார். ஆனால், சமரசம் செய்ய தயங்கிய ராமதாஸ் தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்தார். இதன்பிறகு ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் என்று தொடர் அறிவிப்புகள் வந்தன. கடந்த ஆகஸ்ட் 9ல் மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நிறுவனர் ராமதாஸ் நியமித்த பொதுச் செயலாளர் முரளி சங்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் பொதுச் செயலாளர் முரளி சங்கர் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அவரது கேவியட் மனுக்களை, வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாநில தலைவர் வி.எஸ்.கோபு தாக்கல் செய்துள்ளார். மனுக்களில், தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி தரப்பில் பாமகவுக்கு உரிமை கோரியோ, பாமக அலுவலக முகவரியை நிறுவனர் ராமதாசுக்கு தெரியாமல் மாற்றியதை போல் மாம்பழம் சின்னத்தை குறுக்கு வழியில் பெறவோ நீதிமன்றத்தை அணுகினால் தங்கள் தரப்பை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.