Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் கட்சி தலைவர்கள் வரவேற்பு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சியின் பிரதிநிதிகளுடன் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர மறுத்துள்ள கர்நாடக அரசுக்கு எதிரான கண்டன தீர்மானமும், உச்ச நீதி மன்றத்தை நாடி சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. இதற்கு அனைத்து கட்சியின் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி (அதிமுக): முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது. மேலும், சட்டப்படி நீரை பெறுவதற்கான முழுமையான தீர்ப்பு வந்துவிட்டதால் கர்நாடக அரசிடம் தமிழக அரசு அதனை கேட்டுபெற வேண்டும். செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை காங்கிரஸ் முழு மனதோடு ஆதரிக்கிறது.

கர்நாடக அரசு உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதுமட்டுமின்றி, பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை தீர்ப்பின் அடிப்படையில் பெற்றுத்தர வேண்டும். ஜி.கே.மணி (பாமக): நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் தற்போது வரை கர்நாடக அரசு நடைமுறையை பின்பற்றவில்லை. இதன் மூலம் தமிழ்நாட்டின் பாசன பரப்பு குறைந்து கர்நாடகாவின் பாசன பரப்பு அதிகரித்துவிட்டது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் நிச்சயம் வழக்கு தொடர வேண்டும்.

திருமாவளவன் (விசிக): தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பது கர்நாடக அரசின் கடமையாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கக்காதது அதிர்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட வேண்டும். சதன் திருமலை குமார் (மதிமுக): தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்கும் நீரை பெறுவதற்கு முதல்வர் கூட்டத்தை கூட்டினார். அதன் அடிப்படையில் அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மதிமுக சார்பில் முழு ஒத்துழைப்பு அளிப்போம். வீரபாண்டியன் (சிபிஐ): தமிழ்நாட்டின் உரிமையை பறிப்பதற்கான செயல்களில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது. எனவே, முதல்வர் எடுக்கும் முடிவுகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் முழு ஆதரவு அளிப்போம். கருநாகராஜன்(பாஜக): உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று தீர்ப்பை கர்நாடக அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது.

காவிரி பிரச்னையில் தமிழக மக்களின் உரிமையை பெறுவதற்கும் விவசாயிகளின் பிரச்னைக்கு ஒன்றுபட்டு நிற்கவும் பாஜக துணை நிற்கும். ஈஸ்வரன் (கொமதேக): உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதிப்பதில்லை. தண்ணீர் இல்லாமல் நாமக்கல் மற்றும் சேலத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாய திட்டங்கள் கிடப்பில் உள்ளன. இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஜவஹிருல்லா (மமக): காவிரியில் இருந்து நீர் வராததால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி முழுமையாக நடத்த முடியாத நிலை என்பது ஏற்பட்டுள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் சம்பா சாகுபடியும் செய்ய முடியாத சூழல் உருவாகும். தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதை தடுக்கும் கர்நாடக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கதக்கது.