சென்னை: கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் அச்சுதானந்தன் மறைவு கேரள மாநிலத்திற்கு மட்டுமல்ல இந்திய நாட்டுக்கு பேரிழப்பு. அச்சுதானந்தன் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் கேரள அரசியலில் ஒரு வலிமையான தலைவராக அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கல். பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): அச்சுதானந்தனின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தமிழ்நாடு மாநிலக்குழு தெரிவித்துக் கொள்கிறது. மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சிக் கொடிகளை 3 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.
கட்சி நிகழ்ச்சிகளை 3 நாட்களுக்கு ரத்து செய்து, இரங்கல் கூட்டங்களை நடத்த வேண்டும். முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): பொது வாழ்வில் அனுபவ செறிவுள்ள தலைவரை கேரள மாநில மக்கள் மட்டும் அல்ல, நாட்டின் ஒட்டு மொத்த மதச்சார்பற்ற, சமூக நல்லிணக்கம் பேணும் ஜனநாயக சக்திகள் இழந்து விட்டனர். அச்சுதானந்தன் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் தலைவர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. இதேபோல் மமக தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.