கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருடன் பஞ்சாயத்து அதிமுகவை சிதைக்கும் முயற்சியில் பாஜ ஈடுபடுகிறது: திருமாவளவன் பேட்டி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
செங்கோட்டையனுக்கு பின்னால் பாஜ இருக்கிறது என்பது டெல்லியில் அமித்ஷா சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை, அமித்ஷாவும் நிர்மலா சீதாராமனும் என்ன துணிச்சலில் சந்தித்தார்கள் என்பது, இப்போது ஒரு கேள்வியாக எழுகிறது. தவெக தலைவர் சுற்றுப் பயணத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்திருந்தால், அது ஏற்புடையது அல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து செயல் சுதந்திரம் உண்டு. அந்த வகையில் அவருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் எந்த காரணங்களை முன்னிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அல்லது காலம் தாழ்த்தப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரியாது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் மறுசீரமைப்பு பணியில் கவனம் செலுத்துகிறோம். 22 ஆயிரம் பேர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். விரைவில் 234 தொகுதிகளுக்கும், தொகுதி மாவட்ட செயலாளர் அறிவிக்கப்படுவார்கள். அதன் பின்பு தான் எனது சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்யப்படும். திமுக, அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் இப்போதே சுற்றுப்பயணத்துக்கு தயாராகி விட்டன. நாங்கள் அதேபோல் உடனடியாக சுற்றுப்பயணத்தை தொடங்க வேண்டும் என்ற அவசியம், கட்டாயம் இல்லை. எங்கள் கட்டமைப்பை உறுதி செய்து விட்டு அதன் பின்பு சுற்றுப்பயணம் தொடங்க இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.