சென்னை: ஆசிரியர்கள் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு சிலையை செதுக்க சிற்பி தேவை. அதுபோல ஒரு குழந்தையை சிறுவயதில் இருந்தே உருவாக்கி அன்புள்ள, அறிவுள்ள, சமூக அக்கறை உள்ள மனிதர்களாய் மாற்றுபவர்கள் ஆசிரியர்கள். அத்தகைய ஆசிரியர்களுள் நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்து, கல்வியில் புரட்சி செய்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளான இன்று செப்.5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், ஆசிரியர்கள் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; இருளை அகற்றி வெளிச்சம் பரப்பும் சூரியன் போல், அறியாமை அகற்றி அறிவு ஒளி பரவிடச் செய்யும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ச்சமூகம் அறிவுசார் சமூகமாக வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்தவர்கள் ஆசிரியர்களே! வகுப்பறையில் தங்களையே மெழுகுவர்த்தியாக ஏந்தி, மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். ஆசிரிய பெருமக்களின் முன்னேற்றத்துக்கு கழகமும் - கழக அரசும் என்றும் துணை நிற்கும்! என்று பதிவிட்டுள்ளார்.