Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி அதிமுக கட்சி தலைமை அலுவலகம் வெறிச்சோடியது: தொடர் தோல்வியால் தொண்டர்கள் கவலை

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகம் வெறிச்சோடியது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்படும் தொடர் தோல்விகளால் அதிமுக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர். அதிமுகவில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதேநேரம் தமிழகத்தில் அதிமுக தலைமையில் போட்டியிட்ட கூட்டணி வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளரும் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகனுமான விஜய் பிரபாகரன் மட்டும் நேற்று பிற்பகல் வரை விருதுநகர் தொகுதியில் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். இறுதியில் அந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூரிடம் சுமார் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அதிமுக மற்றும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்த தேமுதிக கட்சியும் அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக தமிழகத்தில் மட்டும் 32 இடங்களில் தனித்து போட்டியிட்டது. தேமுதிகவுக்கு 5 இடங்களும், புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1 என 7 இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது. இதில் அதிமுக போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதில் ஒரு சில இடங்களில் அதிமுக 3 இடத்திலும், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற காலை 8 மணியில் இருந்தே அதிமுக கட்சி வேட்பாளர்கள் அனைவரும் பின்னடைவை சந்தித்து வந்தனர்.

இதனால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நேற்று காலையில் இருந்தே வெறிச்சோடி காணப்பட்டது. கட்சி அலுவலகத்துக்கு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரும் வரவில்லை. பத்திரிகை நிருபர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில், தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள பெரிய அளவிலான டிவி வைக்கப்பட்டு அதில் அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அதிமுக வேட்பாளர்கள் தோல்வி முகத்தில் இருந்ததால், டிவி ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது.

2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன்பிறகு கட்சி உடைந்தது. எடப்பாடி தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரானார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தல், தற்போது 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல் என அனைத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது. இதுபோன்ற தொடர் தோல்விகளால் அதிமுக தொண்டர்களும் சோர்வடைந்துள்ளனர்.

* எடப்பாடி தலைமையில் 9வது ேதர்தல் தோல்வி

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடந்த நாடாளுமன்றம், சட்டமன்றம், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்கள் என 9 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. அதன்படி, 2017ம் ஆண்டு நடந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 39 தொகுதிகளில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்தது. அந்த தேர்தலுடன் நடந்த 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்தது.

2020ம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்வி. 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. 2021ம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இறுதியாக கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.