Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு திமுக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தீவிரம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொமதேக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இதில் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேக கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மற்ற கட்சிகளுக்கும் விரைவில் தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் திமுகு உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை திடீரென அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அடுத்ததாக கூட்டணி கட்சியினரை எந்தெந்த தேதிகளில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்தும், அவர்களுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அதேபோன்று திமுக போட்டியிடக்கூடிய தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, நாளை சென்னையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதனால், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் இறுதி கட்டத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று விசிக மற்றும் மதிமுகவுடன் அடுத்த கட்ட பேச்சவார்த்தை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆர்.டி.சேகர் எம்எல்ஏ சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு கட்சிப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.