நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிக்காட்டியபடி 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
சென்னை: நாடாளுமன்ற நிலைக்குழு சுட்டிகாட்டியபடி 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றியஅரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் அதை முழுமையாக நிதி ஒதுக்கி நிறைவேற்றுவதற்கு பாஜ அரசு தொடக்கத்திலிருந்தே புறக்கணித்து வந்தது.
அதற்கான நிதியும் குறைக்கப்பட்டது. இதையொட்டி, ஊரகத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு 100 நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்காததை தனது அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதில், நடப்பாண்டு பட்ஜெட் தொகை ரூ.86,000 கோடியிலிருந்து ரூ.62,553.73 கோடியாக குறைந்து விட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.
ஒன்றிய பாஜ அரசு, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிதியை ஒதுக்காமல் புறக்கணிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். எனவே, உடனடியாக 2024-25ம் ஆண்டு நிலுவையில் உள்ள தொகையை தனி நிதியாக ஒதுக்கி, நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.86,000 கோடியை மாநிலங்களுக்கு முழுமையாக ஒதுக்கீடு செய்யுமாறு ஒன்றிய பாஜ அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.