நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிப்பு!!
புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. இந்த அமளி மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடைபெறும் என்றும், மக்களவையில் 16 மணிநேரமும், மாநிலங்களவையில் 9 மணிநேரமும் விவாதத்துக்காக ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்திற்குப் பிறகு இது குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டது. இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் நேற்று முன்தினம் திடீரென ராஜினாமா செய்தது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டாலும், அவரது ராஜினாமாவில் ஏதோ மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.