நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும்: மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும் என்று மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். சென்னை தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் 5வது ஆய்வு கூட்டம் நடந்தது. தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஒன்றிய அரசின் ‘தீன்தயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்’ ஒன்றிய மற்றும் மாநில அரசின் 60:40 என்ற நிதிப்பங்களிப்பின் அடிப்படையில் முதல் 37 ஊரக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் 3.38 லட்சம் சுய உதவிக் குழுக்களும், நகர்ப்புறங்களில் 1.41 லட்சம் சுய உதவிக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களில் 55.12 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ், 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியாக ரூ.67 கோடியே 97 லட்சம், சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.801 கோடியே 62 லட்சம், நலிவு நிலைக்குறைப்பு நிதியாக 13,546 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.75 கோடியே 73 லட்சம் வழங்கியுள்ளது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினரை கொண்டு 25,001 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் 1,57,316 பேர் பயனடைந்துள்ளனர். இவற்றில் 17,207 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25 கோடியே 81 லட்சம் சிறப்பு சுழல்நிதியாக வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களின் தடையற்ற செயல்பாடுகளுக்காக திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இன்று வரை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 362 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி, மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கி கடன் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 3-9-2025 வரை 1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.13 ஆயிரத்து 62 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ஒரு சட்டமன்ற தொகுதி உறுப்பினருக்கு ஒரு நிதியாண்டிற்கு ரூ.3 கோடி வீதம் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ரூ.702 கோடி ஆண்டொன்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடி நிதி வழங்குவதால் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வலியுறுத்தி வருகிறோம்.
எனவே, இதனை ஒன்றிய அரசு 10 கோடி ரூபாயாக உயர்த்த இந்த கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றி பரிந்துரை செய்து அனுப்பப்படும். தற்போது eSAKSHI போர்ட்டலில் ஏஜென்சி ஒப்புதல் மற்றும் PFMS போர்ட்டலில் திட்ட செயலிழப்பு ஒப்புதலை ஒன்றிய அரசே வழங்குவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க இப்பொறுப்பு ‘மாநில நோடல் ஏஜென்சிக்கு’ வழங்கப்பட வேண்டும். அதேபோல், eSAKSHI போர்ட்டலில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்படும் பணிகளை நேரடியாக தொகுதிவாரியான சுருக்க அறிக்கையை பதிவிறக்கம் செய்ய ஏதுவாக eSAKSHI போர்ட்டலை மேம்படுத்துமாறு ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கலாம் எனவும் இந்த குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது.
பிரதம மந்திரி வேளாண் நீர்ப்பாசன திட்டம் - ‘ஒரு துளி நீரில் அதிக பயிர்’ என்ற திட்டம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்ற நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நுண்நீர் பாசன அமைப்புகள் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 55 விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45 விழுக்காடு மானியமும் வழங்கப்படும். ஆனாலும், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட திராவிட மாடல் அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து 100 விழுக்காடு மானியத்தை சிறு, குறு விவசாயிகளுக்கும், 75 விழுக்காடு மானியத்தை இதர விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது.
12 விழுக்காடு சரக்கு மற்றும் சேவை வரியையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது. இந்த ஊக்கத்தால் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பயிர்கள் சாகுபடி பரப்பளவு அதிகப்படுத்தப்படுகிறது. “ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே” நமது முக்கிய நோக்கமாகும்.
* குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்த தமிழ்நாட்டில் செயல்படும் 54,449 குழந்தைகள் மையங்களில் பயன்பெற்று வரும் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான சுமார் 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. மேலும், சுமார் 5.50 லட்சம் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு தாய்-சேய் ஊட்டச்சத்து நடைமுறை கண்காணிக்கப்படுகிறது.
* குழந்தைகள் மையங்களில் 2 முதல் 6 வயதிற்குட்பட்ட சுமார் 10 லட்சத்து 86 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் வாரம் மூன்று தினங்களுக்கு முட்டைகளும், 1 முதல் 2 வயது வரையிலான 6 லட்சத்து 75 ஆயிரம் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டை வீதம் தாய்மார்கள் மூலம் வீட்டிலேயே வழங்கப்படுகிறது.
* அனைத்து குழந்தைகளுக்கும் 2 செட் வண்ணச்சீருடைகளும் நமது அரசு வழங்குகிறது. அனைத்து மையங்களிலும் 100 சதவீதம் குடிநீர், கழிவறைகள், மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* இதுவரை 3,397 குழந்தைகள் நேய மையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
* 6,390 குழந்தைகள் மையங்களை திறன்மிகு குழந்தைகள் மையமாக தரம் உயர்த்தி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 5,582 மையங்கள் தரம் உயர்த்த ஆணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
* நமது அரசின் முனைப்பான செயல்பாடுகளின் விளைவாக தமிழ்நாடு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன்படி 25 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் உயரக் குறைபாடு 11.8 விழுக்காடாக குறைந்துள்ளது.
* 14.6 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் மெலிவுத் தன்மை 3.6 விழுக்காடாக குறைந்துள்ளது.
* 22 விழுக்காடாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 விழுக்காடாக குறைந்துள்ளது.
* குழந்தைகளின் வளர்ச்சி வீதம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது இதன் மூலம் தெள்ளத்தெளிவாகிறது.
* ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற மகத்தான திட்டத்தின்படி முதற்கட்டமாக 1,07,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 15-11-2024 அன்று துவங்கப்பட்டு 76,705 குழந்தைகளுக்கு கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 0-6 மாதங்கள் வரையிலான குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 80.6 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
* நம்முடைய அனைத்து திட்டங்களும் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத்தொகை எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஒன்றிய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்கிட வேண்டும் என இக்குழு மூலமாகவே வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அரசு செயலாளர்கள் தங்களது துறைவாரியான திட்டங்கள் தொடர்பான கருத்துகளை விளக்கினர். எம்பிக்கள் டி.ஆ.பாலு, திருமாவளவன், கே.சுப்பராயன், சு.வெங்கடேசன், துரை வைகோ, நவாஸ்கனி ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர். இறுதியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலாளர் நன்றி கூறினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கீதாஜீவன், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், நா.எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மவுலானா மற்றும் கருணாகரன், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தலைமை தபால் அலுவலர், அலுவல்சாரா உறுப்பினர்கள் பி.ஜனகரத்தினம், டி.தீபிகா, பேட்ரிக் ராஜ்குமார் அந்தோணிசாமி மற்றும் அரசு சார்பற்ற அமைப்பு சார்பாக எஸ்.வி.முருகன் கலந்து கொண்டனர்.