புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் டிசம்பர் 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தனிநபர் மசோதாக்களும், டிசம்பர் 12ம் தேதி தனிநபர் தீர்மானங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.
கடந்த கூட்டத்தொடரின்போது ‘எஸ்.ஐ.ஆர்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் நோக்கில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால் வாக்காளர் பட்டியல் குளறுபடி, எஸ்ஐஆர் விவகாரம் மற்றும் ரயில் விபத்துகள் போன்ற முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து ஒன்றிய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் வியூகம் அமைத்துள்ளன.

