நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆர் விவாதத்தின்போது நேற்று நான் இடைமறித்து பேசியதில் அமித் ஷா பயந்துவிட்டார்: ராகுல் காந்தி பேட்டி
டெல்லி: நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆர் விவாதத்தின்போது நேற்று நான் இடைமறித்து பேசியதில் அமித் ஷா பயந்துவிட்டார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் சிறப்பு தீவிர திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரு, இந்திரா காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக உரையாற்றினார்.
இதனைத் அடுத்து, அமித்ஷாவின் பேச்சைப் புறக்கணித்து, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், இன்று ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்தில் நேற்று அமித் ஷா பதற்றத்துடன் இருந்தார்; அவரின் கைகள் நடுங்கின, நீங்கள் கண்டிருப்பீர்கள். அமித் ஷா நாடாளுமன்றத்தில் தவறான வார்த்தைகளை பிரயோகப் படுத்தினார்.
அமித் ஷா பெரும் மன அழுத்தத்தில் இருந்ததை நாடே பார்த்தது. எனது குற்றச்சாட்டுகளை மறுத்து அமித் ஷா பதிலோ, ஆதாரங்களோ வழங்கவில்லை. நாங்கள் வெளிப்படையாக பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குத் திருட்டு ஆதாரங்களை வெளியிட்டோம். அமித் ஷாவை நேரடி விவாதத்துக்கு அழைத்து சவால்கூட விட்டேன். நான் விடுத்த சவாலுக்கோ குற்றச்சாட்டுகளுக்கோ அமித் ஷாவிடம் எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்தார்.


