Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடாளுமன்ற துளிகள்

* பிரதமர் அலுவலகத்தில் 12,000 புகார்கள் நிலுவை

ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘www.pmindia.gov.in என்பது ஒன்றிய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்கான பொதுவான இணையதளம். குறைகள் பெரும்பாலும் 30 நாட்களில் தீர்க்கப்படும். இதில், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 58,612 புகார்கள் வந்துள்ளன. முந்தைய ஆண்டில் தீர்க்கப்படாமல் 34,659 புகார்கள் இருந்தன. இவற்றில் 80,513 புகார்கள் தீர்க்கப்பட்டு, 12,758 புகார்கள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டில், மொத்தம் 1,84,227 புகார்கள் பெறப்பட்டு, 1,69,273 நிவர்த்தி செய்யப்பட்டு 34,659 நிலுவையில் இருந்தன’ என்றார்.

* ஜிஎன்எஸ்எஸ் சுங்க வசூல் பெங்களூருவில் சோதனை

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெ.டுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘கர்நாடகாவின் பெங்களூர் மைசூர் இடையேயான என்எச்-275 மற்றும் அரியானாவின் பானிபட்-ஹிசாரில் இடையேயான என்எச்-709 ஆகிய நெடுஞ்சாலைகளில் ஜிஎன்எஸ்எஸ் (குளோபர் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம்) அடிப்படையிலான் சுங்க வசூல் செயல்முறையை சோதனை அடிப்படையில் அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஜிஎன்எஸ்எஸ் உடன் பாஸ்டேக்கும் நடைமுறையில் இருக்கும். சோதனை முயற்சியை தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார். ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான மின்னணு முறையில் நெடுஞ்சாலைகளில் பயணித்த சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும். வாகனங்களில் உள்ள நம்பர் ப்ளேட்டை அடையாளம் காணுவதன் மூலம், வங்கிக் கணக்குகள் இருந்து இந்த முறை மூலம் சுங்கக் கட்டணம் கழிக்கப்படும்.

* காலிபணியிடங்களை நிரப்ப நடவடிக்கை

ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளும் பேக்லாக் ரிசர்வ்டு (தகுதிவாய்ந்த நபர் கிடைக்காததால் நிரப்பப்படாமல் இருப்பவை) காலிபணியிடங்களை அடையாளம் கண்டு அவற்றை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான தடைகளை நீக்க குழு அமைத்து, சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும். இடஒதுக்கீடு குறித்த உத்தரவுகள், அறிவுறுத்தல்களை உரிய முறையில் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய அனைத்து அமைச்சகங்களும் துணைச் செயலர் மற்றும் அதற்கு மேலான பதவியில் உள்ள ஒரு அதிகாரியை தொடர்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்’ என்றார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில்

* 1,200 இடஒதுக்கீடு பிரிவினர்

கடந்த 5 ஆண்டுகளில் இடஒதுக்கீடு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 1,195 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பதிலில், ‘‘ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐபிஎஸ் ஆட்சேர்ப்புகளில் எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முறையே 15, 7.5 மற்றும் 27 சதவீதம் என்ற விகிதத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், இடஒதுக்கீடு மற்றும் பிற்படுத்தப்பட்ட ரிசர்வ் பிரிவைச் சேர்ந்த 233 அதிகாரிகள் 2018ம் ஆண்டிலும், 231 பேர் 2019ம் ஆண்டிலும், 223 பேர் 2020ம் ஆண்டிலும், 250 பேர் 2021ம் ஆண்டிலம், 258 பேர் 2022ம் ஆண்டிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

* எந்த உயிரியல் தாக்குதலுக்கும் தயார்

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில், ‘‘தற்போதைய சூழலில் உயிரியல் தாக்குதல் குறித்த எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதே சமயம், நாட்டின் மீது எந்த உயிரியல் தாக்குதல்களுக்கும் பதிலளிக்க அரசு முழு அளவில் தயாராக உள்ளது. இதுபோன்ற நெருக்கடிகள், பேரழிவுகளை திறம்பட எதிர்கொள்ள நிலைகாட்டு வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.