பாரிமுனை காளிகாம்பாள் கோயிலிலிருந்து ஆடி மாத ஒருநாள் அம்மன் கோயில் சுற்றுலா: அமைச்சர்கள் சேகர்பாபு, ராஜேந்திரன் தொடங்கி வைத்தனர்
சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா நிகழ்வு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் 160 பயணிகளுடன் கூடிய ஆன்மிக சுற்றுலா வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த சுற்றுலா ஆகஸ்ட் 15ம் தேதி வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு மாத காலத்திற்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. சுற்றுலாக்களில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக அன்பர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சுற்றுலாத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், 5 நாட்கள் 108 அம்மன் கோயில்கள் சுற்றுலாவிற்கும், ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் ராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் மேயர் பிரியா, சுற்றுலா இயக்குநர் கிருஸ்துராஜ், ராயபுரம் மண்டலக் குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் இசட். ஆசாத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.