திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சாக்கை பகுதியில் பிரம்மோஸ் ஏவுகணை மையம் அருகே ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் குடில் கட்டி தங்கி இருந்தனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் கடந்த வருடம் பிப்ரவரி 18ம் தேதி இரவில் இந்தப் பெண் குழந்தை பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தது. நள்ளிரவில் தாய் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சற்று தொலைவில் ஒரு முட்புதரில் மயங்கிய நிலையில் அந்தப் பெண் குழந்தை மீட்கப்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று நடத்திய பரிசோதனையில் அந்தக் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தையை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்தது திருவனந்தபுரம் வர்க்கலாவை சேர்ந்த அசன் குட்டி(46) என தெரியவந்தது. இந்த வழக்கு திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஷிபு, அசன் குட்டிக்கு 67 வருடம் சிறையும், ரூ.12 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.