புவனகிரி : பள்ளியில் வழங்கிய காலை உணவில் மாணவனின் தட்டில் பல்லி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நேற்று காலை மாணவர்களுக்கு சேமியா கிச்சடி உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை மாணவர்கள் வாங்கி சாப்பிட்டபோது, ஒரு மாணவனின் தட்டில் பல்லி கிடந்தது.
இதை பார்த்த அருகில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உணவை சாப்பிடவில்லை. இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு வந்து, பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களை ஏன் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பவில்லை என்று கூறி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த புவனகிரி போலீசாரும் பள்ளிக்கு வந்து காலை உணவு சாப்பிட்ட 17 மாணவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் வீடுகளுக்கு திரும்பினர். பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கிய உணவில் பல்லி விழுந்த சம்பவம் குறித்து வருவாய் துறையினரும், காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.