Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பறந்து போ

அவசர வாழ்க்கை, முதலாளித்துவம் பெருகி விட்ட உலகில் ஒவ்வொரு குழந்தையையும் முதலாளியாக மாற்றத் துடிக்கும் பெற்றோர்கள், அதற்காக நிகழும் சர்க்கஸ் குழந்தை வளர்ப்பு என அனைத்தையும் கேள்விக் கேட்கிறது “பறந்து போ” திரைப்படம் . சுற்றி இருக்கும் இயற்கையை நேசிக்கும் மனம் இன்று மிகவும் தேவைப்படுகிறது. குழந்தைகளின் மனதில் இருக்கும் கற்பனைகளையும், அவர்களுடைய கேள்விகளையும் அப்படியே ஏற்று, அவர்களோடு பயணிக்கக்கூடிய மனநிலையைக் கொண்டிருப்பதே ஒரு சமூகத்தின் நலனுக்கான அடிப்படை. இந்த உண்மையை விளக்கும் வகையில் “பறந்து போ” திரைப்படம் உருவாகியுள்ளது.இது ஒரு சாதாரணக் குழந்தையின் கதை அல்ல. ஒரு வாத்து முட்டையைக் கூட ‘டைனோசர் முட்டை’ என யோசிக்கும் அளவுக்கு குழந்தைகளின் கற்பனை பெரிது. அதே சமயம், நீ கொடுக்கும் தங்க முட்டை கூட அவனுக்கு சாதாரண வாத்து முட்டைதான் என்கிற உண்மையையும் சொல்லும் ஒரு குட்டி சிறுவன் அன்பு சொல்லும் கதை. படத்தின் இயக்குனர் ராம், இளம் மனங்களின் கற்பனையை மிக நுட்பமாகவும் எதார்த்தமாகவும் படம் பிடித்திருக்கிறார். அவருடைய படங்கள் குழந்தைகளின் வாழ்வியலைச் சொல்லும் படமே ஆனாலும் ‘‘தங்க மீன்கள்'' , ‘‘பேரன்பு’’ என குழந்தைகளுடன் பார்க்கக் கூடிய படங்களாக இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் அவருடைய அத்தனை டெம்ப்ளேட்டுகளையும் உடைத்து லேசாக, ஒரு அப்பா, அம்மா, குழந்தைகளாக பார்க்கக் கூடிய, பார்க்க வேண்டிய படமாக கொடுத்திருக்கிறார்.

“பறந்து போ” திரைப்படம் நம்மை ஒரு குழந்தையின் கண்கள் வழியே உலகத்தைப் பார்க்க வைக்கிறது. ஒரு ஊர்ல ஒரு அபார்ட்மென்ட். அதில் வேலைக்குச் செல்லும் அப்பா கோகுல்( சிவா), அம்மா குளோரி ( கிரேஸ் ஆண்டனி). அப்பா , அம்மா அரவணைப்பைத் தேடும் படு சுட்டி அன்பு (மிதுல் ரையான்). அழுத்தம் கொடுக்கும் மாதத்தவனைகள், அக்கம் பக்கத்தை பார்த்து சூடு போட்டுக் கொள்ளும் திணிக்கப்பட்ட மேல்தட்டு நடுத்தர வர்க்க வாழ்க்கையின் பிடியில் சிக்கித் தவிக்கும் அப்பா. கூண்டுச் சிறைக்குள் இருந்து பறக்கத் துடிக்கும் மகன் அன்பு இவ்விருவரும் ஒரு நாள் தங்களது இயந்திரம் போன்ற வாழ்க்கையில் இருந்து விடுபட்டுப் பறக்க நினைத்து பைக்கில் செல்கிறார்கள். ஒரு எளிமையான பயணம் அதில் அப்பா மகன் இருவரும் பார்க்கும் உலகம் தான் கதை.போராடத் தெரிந்த உயிர்கள் தான் பிழைத்து வாழும் என்று அறிவியலாளர் டார்வின் ஒரு கோட்பாட்டை உருவாக்கி விட்டுச் சென்று விட்டார். ஆனால் நாம் போராட்டத்தை மட்டுமே செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணம் , எதிர்கால பயம், பிழைத்தல், எதிர்ப்பு ஆகியவற்றை தாங்கிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். இன்றைய கல்வி, குடும்பம், சமூக ஒழுங்கு, குழந்தை மனநிலை, மற்றும் இயற்கையின் மீதான நம் அணுகுமுறைகளை இயக்குனர் ராம் சின்னச் சின்னக் காட்சிகளில் எடுத்து வைக்கிறார்.

உனக்கு தான் அதன் விலை ரூ.4500, எனக்கு ரூ.50 என்றாலும் அதிலும் என் மகிழ்ச்சி இருக்கிறது. ‘‘எனக்கு இது பிடிச்சிருக்கு, அவனுக்கு அது பிடிச்சிருக்கு’’ என்கிற காட்சியில் அப்பாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்து வகுப்பெடுக்கிறான் அன்பு. பணத்தைத் தாண்டி இந்த உலகில் புரிந்துகொள்ள, தெரிந்து கொள்ள, சம்பாதிக்க எவ்வளவோ உள்ளன. காடு, வாய்க்கால், முள் செடிகள், இங்கே எல்லாம் மண்ணில் புரண்டு விளையாடி வீடு திரும்பிய வாழ்க்கை நமக்கு வாய்த்தது. வந்தால் சோறு, இல்லையேல் எப்படியோ போ என்கிற பாணியில் தான் நம்முடைய குழந்தைப் பருவங்கள் எளிமையாகக் கடந்தன. பெற்றோர்களும் அருகாமையில் இருந்த ஏதோ ஒரு பள்ளிக்கூடம், காசு இருந்தால் விடுமுறை நாட்களில் ரெண்டு துண்டு கறி, இல்லையேல் எலும்புக் குழம்பு, அதுவும் இல்லை என்றால் முட்டை என வளர்த்தார்கள். எதுவும் வேண்டாம் ஒரு சட்டி சாதம் போதும். நம் அப்பா - அம்மா, பாட்டி - தாத்தாக்களுக்கு அவ்வளவு எளிமையாக சத்தியப்பட்ட குழந்தை வளர்ப்பு ஏன் கயிற்றின் மேல் நடந்தால் கூட பரவாயில்லை, கத்தி மேல் நடப்பது போன்ற நிலையாக இன்று மாறியிருக்கிறது.

எதிர்காலம், எதிர்காலம் என இன்றைய குழந்தைத்தனத்தை தொலைத்து எதற்கு இத்தனை வகுப்புகள், யாரை ஜெயிக்க இவ்வளவு பாடு படுகிறோம். நம்மை சுற்றி காடு , மலை, காக்கா, குருவி, சூரியகாந்திப் பூக்கள் இப்படி ஆயிரம் இருக்க எதை நோக்கி இப்படி அடுக்குமாடி குடியிருப்பில் ஜெயில் கைதிகள் போல் வாழ்க்கை வாழ்கிறோம். பாதுகாப்பு எனக் கருதி நாம் அவர்களுக்குக் கொடுக்கும் இரும்புக் கதவுகள் அத்தனையும் அவர்கள் குழந்தைப் பருவத்தை அடைக்கும் சிறைகள். சிறகடித்துப் பறக்கத் துடிக்கும் குழந்தைக்கு கால்களில் சங்கிலிதான் கட்டவில்லை அதற்கு பதிலாக கைகளில் டிஜிட்டல் திரைகளைக் கொடுத்து, வீடு என்கிற பெயரில் பெரிய அளவிலான கூண்டிலும் அடைத்து விடுகிறோம். ‘‘ டேய் அன்பு! ஜெயில் மாதிரி இருக்குடா’’ என சிவா சொல்லும் இடத்தில் நமக்கும் நம் வீட்டுக் கதவுகள் ஞாபகம் வரலாம். என்ன செய்வது இதுதான் முதலாளிகள் உருவாக்கிய உலகம், இதில் உழன்று, உருண்டு போராடித்தான் ஆக வேண்டும். எல்லாவற்றையும் மொத்தமாக விட வேண்டாம், விட முடியாது. ஒரு ரெண்டு நாட்கள் ஓரமாக வைத்து விட்டு வா பறக்கலாம்” என்கிறார் இயக்குனர் ராம்.

பெரியவர்களாகிவிட்டதால், பல விஷயங்களில் நம்பிக்கையையும், கற்பனையையும் இழந்துவிடுவோம் அது சாதாரணம். ஆனால் இக்கால குழந்தைகள் குழந்தையாக இருக்கும் போதே கற்பனையை இழந்து வருவதுதான் வருத்தம். ‘‘அப்பா போதும், எனக்காக நீ பொய் சொன்னதெல்லாம் போதும். உன்னால் என்ன முடியுமோ அந்த வாழ்க்கைக் கொடு’’ என்கிறான் அன்பு. அவன் மட்டுமல்ல எல்லா குழந்தைகளும் தான். அவர்களுக்குப் புலப்படாத வாழ்க்கையை நாமே அறிமுகம் செய்து அதற்குள் திணித்து, அது கொடுக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப சம்பாதிக்க ஓடியே நாம் பலரும் போலித்தனமான வாழ்க்கையின் பிடியில் இருக்கிறோம். அதில் தாங்கள் யார் என்கிற கேள்விக்கு பதிலே தெரியாமல் குழந்தைகளும் டிஜிட்டல் திரைக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளவே பழக்கப்படுகிறார்கள்.

குழந்தைகள் உலகம் சிறியது, அவர்களோடு உலகத்தைக் காணக் கற்றுகொள்வோம். ஒரு சிறுவனின் கற்பனையை மதிப்பதன் மூலம், நாம் நம்மை இழந்து விட்டோம் என்பதையும் படம் உணர்த்தும். இயற்கையை நேசிக்கவும், பசுமையை காப்பதற்கும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்வோம். அன்பு பறக்கத் துவங்கிவிட்டான். அவன் அப்பா, அம்மாவும் கூட பறக்கக் கற்றுக்கொள்கிறார்கள். நாம் எப்போது? என்கிற கேள்வி கேட்கிறார் இயக்குனர் ராம். “பறந்து போ” சூரியகாந்தி பூ எடுக்கும் எளிமையான வாழ்க்கைப் பாடம்.

- மகளிர் மலர் குழு