‘பரம் சுந்தரி’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு; மல்லிகை பூ சூடிக்கொண்டு நாங்கள் மோகினியாட்டம் ஆடுபவர்கள் அல்ல: விமர்சித்த கேரள பாடகியின் காணொளி நீக்கம்
மும்பை: கேரளாவைத் தவறாகச் சித்தரித்ததாக ‘பரம் சுந்தரி’ படத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், படத்தைக் கடுமையாக விமர்சித்த பாடகியின் காணொளி சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகர் ஜான்வி கபூர் நடிப்பில், பிரபல இயக்குனர் துஷார் ஜலோட்டா இயக்கியுள்ள ‘பரம் சுந்தரி’ திரைப்படத்தின் முன்னோட்டம், ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றாலும், கடும் எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளது. இதில் கேரளாவை தவறாக சித்தரிப்பதாகவும், ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்பு தவறாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து மலையாளப் பாடகி பவித்ரா மேனன் வெளியிட்ட விமர்சனக் காணொளி, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பதிவில், ‘மலையாள நடிகையை ஏன் கதாநாயகியாக நடிக்க வைக்கவில்லை? நாங்கள் திறமை குறைந்தவர்களா? எல்லா இடங்களிலும் மல்லிகைப் பூ சூடிக்கொண்டு, மோகினியாட்டம் ஆடுபவர்கள் நாங்கள் அல்ல’ என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதேபோல், தேவாலயத்தில் நடப்பது போன்ற காதல் காட்சிக்கு சில அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், தனது காணொளியை இன்ஸ்டாகிராம் தளம் நீக்கிவிட்டதாக பவித்ரா மேனன் தெரிவித்துள்ளார். மூன்றாம் தரப்பிலிருந்து வந்த காப்புரிமை மீறல் புகாரைத் தொடர்ந்து, அப்பதிவு நீக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராம் அனுப்பிய அறிவிப்பின் புகைப்படத்தையும் பவித்ரா மேனன் பகிர்ந்துள்ளார். மேலும், தனது பதிவில், ‘குரல் வளை உள்ள அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்’ என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். தினேஷ் விஜன் தயாரித்துள்ள இப்படத்தில் ரெஞ்சி பணிக்கர், சித்தார்த்தா சங்கர், சஞ்சய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.