பரமக்குடி : பரமக்குடி ஜீவா நகரில் உள்ள நெசவாளர் பயிற்சி மையத்தில், இளைஞர்களுக்கான கைத்தறி நெசவு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, நான் முதல்வன் திட்டத்தில் இளைஞர்களுக்காக நெசவு பயிற்சி அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 25 இளைஞர்களுக்கு 45 நாட்கள் நெசவு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்கான துவக்க விழா பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தலைமையில் தொடங்கியது. 18 முதல் 33 வயதிற்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண் நெசவாளர்களை ஊக்கு விக்கும் வகையில் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. மேலும், இவர்களுக்கு கையேடுகள் வழங்கப்படுவதுடன், நெசவு பயிற்சி முறையாக வழங்கப்படுகிறது.
பயிற்சி முடிந்த பின் ஊக்கத்தொகை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பயிற்சி முகாமில் மாநில அரசின் சிறந்த நெசவாளர் விருது பெற்ற மூன்று முன்னோடி மகளிர் பங்கேற்று இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளித்து வருகின்றனர். பயிற்சி நிறைவடைந்து 2ம் கட்ட பயனாளர்களுக்கும் தொடர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கைத்தறிவு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

